உரை
 
2. இலாவாண காண்டம்
 
2. கடிக்கம்பலை
 
            மாற்றுத்தொழின் மன்னர் மயங்கிய ஞாட்பினுள்
           கூற்றுத்தொழில் இளையர் குடர்சூடு மருப்பின
     190    வெம்படை மிகப்பலர் மெய்ம்மிசை எறியினும்.
           தம்படைக் கொல்காப் பண்புடன் பயிற்றி
           மூத்தோர் பெண்டிர் நீத்தோர் மகாஅரென
           நாற்பா லோரையு நூற்பாற் செய்தொழிற்
           பாகர் வேண்டினும் பையுள் செய்யா
     195    வேக உள்ளத்து வேழந் தெரிந்து
 
        188 - 195 ; மாற்றுத்தொழின் மன்னர்.,,,.,வேழந்தெரிந்து
 
(பொழிப்புரை) பகைமன்னர் வந்து கலந்த போர்க்களத்தின் கண்ணே, அப் பகைமன்னர் மறவருடைய குடர்களை மாலையாகச் சூட்டிக்கொள்கின்ற மருப்புக்களை உடையனவும், பகைவர் கொடிய படைகளைத் தம்மேல் எறிந்தவிடத்தும், பின்னிடாத தன்மையோடே பழக்கியனவும், மூத்தோர் முதலிய நால்வகையோரையும் தம் பாகரே விரும்பியபொழுதும் இன்னல் செய்ய உடன்படாதனவும், சினமிக்க  உள்ளமுடையனவும் ஆகிய யானைகளை ஆராய்ந்துகொண்டு என்க.
 
(விளக்கம்) 188 மாற்றுத் தொழில்மன்னர் - பகையரசர் ஞாட்பு-போர்க்களம்.
  189, கூற்றுத்தொழில் - (மறலிபோன்று) கொல்லும் தொழில்.
  191. தம்படைக்கண் ஒல்காப் பண்பு என்க. அஃதாவது தமது படையினின்றும் ஓடாத வன்மை என்றவாறு,
  192. நீத்தோர்-துறவியர்,மகாஅர்-சிறுவர்,
  193 நூல்- யானை நூல்.
  194. பையுள்-துன்பம்.
  195 வேகம்-சினம், தெரிந்து ஆராய்ந்து எடுத்து.