உரை
 
2. இலாவாண காண்டம்
 
2. கடிக்கம்பலை
 
            மண்ணக மருங்கின் மதிபல பயின்றன
            விண்ணகம் என்னையும் விடுக்குங் கொல்லென
            மதியகம் வெள்க வனப்பொடு புணர்ந்த
     220    கதிர்விடு திருமுகத் தெதிர்வன போலச்
            சென்றுவந் துலாவுஞ் சேயரிக் கண்ணினர்
            ஈன்றோர் மாட்டும் எதிர்முக நோக்காது
            மான்தோங் கூறு மம்மர் நோக்கினர்
 
        217- 223 ; மண்ணக மருங்கின்......மம்மர் நோக்கினர்
 
(பொழிப்புரை) மண்ணிடத்தே பற்பல திங்கள் மண்டிலம். உளவாய் திரிகின்றன ஆதலால் இஃதோர் அரும்பொருளன்றெனக் கருதி வானம் தன்னைக் கைவிட்டொழியுமோ என்று திங்கள் மண்டிலம் நாணுதற்குக் காரணமான ஒளிவிடுகின்ற மிக அழகிய முகத்தின்கண்ணே தம்முள் ஒன்றைஒன்று எதிர்ப்பனபோன்று பிறழாநின்ற செவ்வரி பரந்த கண்களையும் பெற்றோரிடத்தும் எதிரிட்டு நோக்காததும் மானைப்பழித்த அழகுடையதும் ஆகிய மயக்கமுடைய பார்வையினையும் உடையோரும் என்க.
 
(விளக்கம்) 217, மண்ணுலகத்தே பலமதிகள் உளவாதலால் இஃதோர் அரும்பொருளன்றென வானம் என்னைக் கைவிடுமே என்று எண்ணித் திங்கள்  மண்டிலம் நாணுதற்குக் காரணமான வனப்பையும். ஒளியையும் உடைய முகம் என்க.
    211, வெள்குதல்-நானுதல்,
    222, ஈன்றோரையும் எதிரிட்டு நோக்காது என்க, இது நாண மிகுதி கூறிற்று. 
    223, மான்: ஆகுபெயர். மான்நோக்கு எம்மைப் போன்ற அழகுடையன அல்ல என்று பழிகூறும் நோக்கு என்க. மம்மர் - மயக்கம்.