உரை
 
2. இலாவாண காண்டம்
 
3. கட்டில் ஏற்றியது
 
           பாலுலை வெந்த வாலவிழ்க் கலவையும்
           தேனுலை வெந்த தூநிறத் துழவையும்
     40    புளியுலை வெந்த பொன்னிறப் புழுக்கலும்
           கரும்புலை வெந்த கன்னற் றுழவையும்
           நெய்யுலை வெந்த மைந்நிறப் புழுக்கொடு
           பொன்னகல் மணியகல் செப்பகல் வெள்ளி
           ஒண்ணிறப் போனக மண்ணக மலிர
     45    அரிவையர் அடுமடை அமிழ்துகொண் டோச்சிப்
 
        38 - 45 : பாலுலை வெந்த......அமிழ்து கொண்டோச்சி
 
(பொழிப்புரை)  பாலுலை முதலிய உலைகளிலே வெந்த கலவை முதலியவற்றைப் பொன் முதலியவற்றாற் செயயப் பட்ட அகல்கள் நிறையும்படி மகளிர் சமைத்துத்தந்த கடவுட் பலியாகிய உணவினைப் படைத்து என்க.
 
(விளக்கம்) வால் அவிழ்க் கலவை-வெள்ளிய சோற்றோடு கலந்த கலவை. 37. தேனுலை-தேனை நீராக வைத்த உலை. தூநிறம் வெண்ணிறம், துழவை - துடுப்பால் துழாவிச் சமைத்த உணவு. 40, புளிநீரில் வெந்த பொன்னிறமான புளிஞ்சோறு என்க 41. கன்னற்றுழவை-கறுப்பஞ்சாற்றிற் சமைத்த அக்காரவடிசில். 42. மைந்நிறப்புழுக்கு - கருநிற உணவு,
    43. பொன்னாலும் மணியாலும் செம்பாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட அகல்கள் என்க. 44. போனகம்-உணவு. மலிர- நிறையும்படி.  மடை தெய்வத்திற்கிடும் உணவுப் பலி, அமிழ்து; ஆகுபெயர், 45, ஒச்சி-கொடுத்தென்க,