உரை
 
2. இலாவாண காண்டம்
 
3. கட்டில் ஏற்றியது
 
         அரம்போழ் அவ்வளை அணிந்த முன்கைச்
   70    சுருங்காச் சுடரொளிச் செம்பொற் பட்டம்
         சூளா மணியொடு துளங்குகடை துயல்வரும்
         புல்லகம் பொருந்திய மெல்லென் ஓதிப்
         பொன்னணி மாலை பொலிந்த பூமுடீஇ
         வண்ணப் பூமுடி வாசவ தத்தையைச்
   75    செண்ணக் காஞ்சனை செவ்விதின் தழீஇ
         இலக்கந் திரியா தியற்பட இரீஇ
         நலத்தகை மன்னவன் நட்பொடு புணர்த்த
 
        69 - 77 ; அரம்போழ் அவ்வளை,,,,..நட்பொடு புணர்த்த
 
(பொழிப்புரை)  அழகிய வளையலணியப்பட்ட முன்கையினையும் சூளாமணியும் பொன்பட்டமும் புல்லகமுமாகிய தலைக்கோலங்கள் பொருந்திய கூந்தலையும் அதனைப் பொன்மாலையோடே மலர் மாலையையும் இட்டு அணிந்து அழகிய கொண்டையாக முடித்த முடியினையும் உடைய வாசவதத்தையைக் காஞ்சனை என்பாள் செம்மையுறத் தழுவி அழைத்து வந்து குறிப்பிடம் பிறழாமல் பண்புற இருத்திப் பேரழகுடைய உதயணனது கேண்மையோடு கூட்டாநிற்ப என்க.
 
(விளக்கம்) 69. அரம்-வாளரம் ; ஈர்வாள். அரத்தாற் பிளக்கப் பட்ட அழகிய வளை என்க. 70. சுருங்கா - மழுங்காத என்க. பட்டம் - ஒருவகைத் தலைக்கோலம், 71. சூளாமணி - முடிமணி, அசைகின்ற இறுதிப்பகுதியையுடைய புல்லகம் என்க. 72,, புல்லகம் - தென்பல்லி வடபல்லி என்னும் தலைக்கோலம் என்பர் அடியார்க்கு நல்லார் (சிலப்-6; 606-8-உரை.) ஓதி-கூந்தல். 73, முடீஇ - முடித்து, 75, செண்ணக் காஞ்சனை-ஒப்பனை மகளாகிய காஞ்சனை என்பாள் என்க. செண்ணம்-ஒப்பனை, 76, இலக்கம்-குறிப்பிட்டஇடம், என்றது மணமகளை இருக்கச்செய்யும் இடம் என்றவாறு. இயற்பட- பண்புறும்படி இரீஇ-இருக்கச் செய்து. 77. நலத்தகை-பேரழகு, மன்னவன்: உதயணன்.