உரை
 
2. இலாவாண காண்டம்
 
3. கட்டில் ஏற்றியது
 
          நன்னிலை உலகினுள் நாவல் போலவும்
          பொண்னணி நெடுமலை போலவும் பொழில்வயின்
          மன்னுக இவரெனத் தன்னெறி பிழையான்
          விதியிற் கூறிய விளங்கிழை வேட்கும்
    95    அதிரா நெறியின் அத்தொழில் கழிந்தபின்
 
        91 - 95 ; நன்னிலை உலகினுள்,,,,,,அத்தொழில் கழிந்தபின்
 
(பொழிப்புரை) தனது நெறியிற்றப்பாத பார்ப்பன முதுமகன், இவ்வுலகிண்கண் மேருவின் பக்கலில் நிற்கும் நாவன் மரம் போலவும் அம்மேருமலை போலவும் பிரிவின்றி நீடுழி நிலை பெற்று வாழ்க என்று வாழ்த்தாநிற்ப நூல் விதியிலே கூறப்பட்ட திருமணச் சடங்குமுறை பிறழாமல் செய்யாநிற்ப அத்தொழின் முடிந்த பின்னர் என்க.
 
(விளக்கம்) நன்னிலையுலகம் என்றது சம்புத் தீவை என்க. நாவல், இது மேருமலையின் பக்கலில் அழிவின்றி நிற்குமொரு மரம் என்ப, இம் மரமுண்மையின் இத்தீவு சம்புத்தீவு என்றும், நாவலம் பொழில் என்றும் வழங்கப்படுகின்றது. மேருவும் நாவன் மரமும் நீடுழி பிரிவின்றி நிலைத்திருப்பது போன்று நிலைத்திடுக என்று வாழ்த்தியபடியாம்.
    91, மிலேச்சர் முதலியோர் வாழ்கின்ற ஏனைத் தீவுகள் போன்றன்றி உயிர்கள் அறமுதலிய உறுதிப் பொருளினை உணர்ந்து. தவநெறி நின்று வீடு பெறுதற்கிடமாகத் திகழ்தலின் நாவலம் பொழில் நன்னிலையுலகம் எனப்பட்டது. 92, பொழில்-நாவலம் பொழில், 94. விளங்கிழை; அன்மொழித் தொகை ; வாசவதத்தை என்க. வேட்கும் -திருமண வேள்வி செய்யும் (அத்தொழில் முடிந்த பின்னர்) என்க.