உரை
 
2. இலாவாண காண்டம்
 
3. கட்டில் ஏற்றியது
 
           ..........கட்டலர் கமழும்
          ஒண்டார் மார்பின் உதயண குமரற்குத்
          தண்டாக் காதலொடு தக்கவை அறிந்து
          விண்ணவர் கிழவன் வீற்றிடங் கடுப்ப
     150   மண்ணக மன்னர் மரபறிந் தியற்ற
          அவ்வளைப் பணைத்தோள் அதிநா கரிகியைக்
          கைவயிற் பிழையாது காஞ்சனை தழீஇ
          உண்மை யுணரா நுண்மைப் போர்வையிவள் 
          பெண்மை காணினோ பிழைப்பிலன் யானெனத்
     155   தன்னொளி சமழ்த்திவள் பெண்ணொளி புகற்ற
          மண்ணார் மணிப்பூண் மாதரை இரீஇயபின்
 
        146 - 156 ; கட்டலர் கமழும்.... மாதரை இரீஇயபின்
 
(பொழிப்புரை) தார் கமழாநின்ற மார்பினையுடைய உதயணனுக்கு அன்போடே தகுந்தவற்றை அறிந்து, அரசருக்குச் செய்யும் முறைமையினையும் உணர்ந்து, இந்திரன் வீற்றிருக்கும் பள்ளிக் கட்டில் போன்று அமைப்ப வளை முதலியவற்றையுடைய வாசவ தத்தையைக் காஞ்சனை என்பாள் கையாற் றழீஇ அழைத்து வந்து அவளைஅப் பள்ளிக் கட்டிலின்மேல் இருக்கச் செய்த பின்னர் என்க,
 
(விளக்கம்) 146, , கட்டலர்- முறுக்குடைய மலர். ஒண்தார் - ஒளி மாலை. 148. தண்டாக் காதல்- அமையாத அன்பு. தக்கவை - அவன் பெருமைக்குத் தகுந்தவை. 149. விண்ணவர் கிழவன் -  இந்திரன். 150, மன்னர் மரபு -அரசர்க்குச் செய்யும் முறைமை - 151. அவ்வளை- அழகிய வளையல். பணை- மூங்கில். அதிநாகரிகி - மிக்க அருட்பண்புடையவளாகிய வாசவதத்தை என்க. 152.. தழீஇ-தழுவி.
    153. உண்மையுணரா நுண்மைப் போர்வை- உளதாந்தன்மை உணரப்படாத நுண்மையினையுடைய மேலாடை என்க
    அந்நுண்போர்வை உதயணன் இவளது பெண்மை நலத்தினைக் காணுங்கால் தடையாக இருப்பின் அந்தோ யான் உய்கிலேன் என்று கருதித் தனதொளி மழுங்கி அவளது பெண்மை ஒளியை வெளிப்படுத்து விரும்பும்படி செய்ய என்க. அஃதாவது மெல்லிய மேலாடைக்கும் மேலாக வாசவதத்தை மெய்யொளி வெளிப்பட்டு விளங்கா நிற்ப என்பது கருத்து
    'இவள் பெண்மை காணின் யான் பிழைப்பிலன்' என்பது போர்வையின் கூற்று. இஃது ' சொல்லா மரபி னவற்றொடு கெழீஇ தொழிற்படுத்து.'' உரைத்தபடியாம் என்க, உதயணன் என வினை முதல் வருவித்துக் கூறுக. யான் பிழைப்பிலேன் என்றது - என்னைக் களைந்தகற்றுவன் என்றவாறு.
    156, மாதரை என்றது சுட்டின் பொருட்டாய் நின்றது. இரீஇய பின்- இருத்திய பின்னர்.