உரை
 
2. இலாவாண காண்டம்
 
3. கட்டில் ஏற்றியது
 
          கண்ணார் குருசிலைக் கவின்பெற ஏற்றித்
          தகைமலர்த் தாரோன் தடக்கை பற்றியவள்
          முகைமலர்க் கோதை முடிமுதல் தீட்டிச்
     160   செம்பொன் தால மலிரப் பெய்த
          மங்கல அயினி மரபுளி உறீஇ
          ஒல்லென் சும்மையொடு பல்வளந் தரூஉம்
          உருமண் ணுவாவின் பெருநகர் மாந்தர்
          ஆசில் செங்கோல் அவந்தியன் மடமகள்
     165   வாசவ தத்தையொடு வத்தவர் இறைவனை
          முட்டில் செல்வமொடு முறையிற் பிழையாது
          கட்டிலேற் றினராற் கருதியது முடித்தென்.
 
        157 - 168 ; கண்ணார்குருசிலைக்....,..கருதியது முடித்தென
 
(பொழிப்புரை)  தலைமைத்தன்மையுடைய உதயணனை அழகுற அப்பள்ளிக் கட்டிலின்மேல் ஏறும்படி செய்து அவ்வுதயணனுடைய கையைப்பற்றி் வாசவதத்தையின்  உச்சிமுதல் அடிகாறும் தொடுவித்துப் பின்னர்ப் பொன் தாலம் நிறையப் பெய்தமங்கலச்சோற்றினை விதிப்படி ஊட்டி இங்ஙனமாகச் சயந்தியம் பெரும்பதியிலுள்ள மாந்தர் பிரச்சோதன னுடைய மகளாகிய வாசவதத்தையுடனே வத்தவநாட்டு மன்னாகிய உதயண குமரனை முட்டில்லாத செல்வத்தோடு முறை பிறழாமல் தாம் கருதிய செயலைச் செவ்வனே செய்து பள்ளிக்கட்டிலின்மேல் ஏற்றினர் என்க.
 
(விளக்கம்) 158 கண்ணார் -கண்ணுக்கு நிறைந்த, (அழகுடைய குருசில் என்க) குருசில்-தலைவன்,உதயணன். கவின்-அழகு.
    158.. தகைமலர்-அழகியமலர்,  தாரோன்; உதயணன். அவள்- அவ் வாசவதத்தையினுடைய. 159. கோதையினையுடைய முடி முதலாகிய உறுப்புக்களைத் தொடச்செய்து. இங்ஙனம் தொடு வித்தலொரு சடங்கென்க. தீட்டி-தீண்டச் செய்து. தீண்டு என்பதன் பிறவினை.
    160. பொற்றாலம்-பொன்னாலாகிய உண்கலம். மலிர-நிறைய.
    161. மங்கல அயினி்-மங்கலச்சோறு. உறீஇ - உறச்செய்து; ஊட்டி என்றவாறு. 162. சும்மை-ஆரவாரம். 163, பெருநகர் என்றது சயந்தி நகரத்தினை.
    164. அவந்தியன்-பிரச்சோதனன், அவனுடைய நாடு அவந்தி நாடு. இனி் அவந்தி என்பது அவன் றலைநகராகிய உஞ்சையின் மற்றொரு பெயராகக் கொள்வாரும் உளர்,
    166. முட்டில் செல்வம்- குறைவற்ற செல்வம்.

               3. கட்டிலேற்றியது முற்றிற்று.