உரை
 
2. இலாவாண காண்டம்
 
4. ஆறாந்திங்கள் உடன்மயிர் களைந்
 
         பெருநில மன்னர் திருநகர்ப் பிறந்துதம்
   10     நாட்டுப்பெயர் பொறித்த சூட்டுப்பொலி சுடர்நுதற்
         கொடிப்பூண் திளைக்குங் கோல ஆகத்து
         வடிப்போழ்ந் தன்ன வாளரித் தடங்கண்
         அருந்தவர்க் காயினுந் திருந்துமுகம் இறைஞ்சாது
         செங்கதிர் விரும்பும் பைங்கொடி நெருஞ்சிப்
   15     பொன்புனை மலரின் புகற்சி போல
         வெறுத்த வேட்கைத் தாமுளஞ் சிறப்பக்
         காதலற் கவாஅங் காம நோக்கத்
         தீரெண் ணாயிரர் பேரெணப் பட்ட
         ஓவியர் உட்கும் உருவக் கோலத்துத்
   20      தேவியர்க் கெல்லாந் தேவி யாகிக்குப்
 
        ( பிரச்சோதனன் மனைவியர் மாண்பு )
         9 - 20 ; பெருநில மன்னர்,,,,,,,தேவி யாகி்கு
 
(பொழிப்புரை)   பெருநில மன்னர் குடியிற்பிறந்து தமது நாட்டின் புகழைத் தமதொழுக்கத்தானே நிறுத்தியவரும், நுதல் முதலியவற்றை உடையவரும் துறவிகளை வணங்கும் பொருட்டும் தலை வணங்காமல் நெருஞ்சிப்பூ ஞாயிற்றை விரும்பும் விருப்பம் போன்று தங்கணவனையே விரும்பும் விருப்பத்தையுடையவரும் உருவ அழகுடையவரும் ஆகிய மனைவியர் பதினாறாயிரவருள் வைத்து ஏனையோர்க் கெல்லாம்
 
(விளக்கம்) 9 மன்னர் திருநகர்- அரண்மனை ; எனவே மன்னர் குடியிற் பிறந்து என்பதாயிற்று.
    10. உரைசால் பத்தினியை உயர்ந்தோர் புகழ்வதுண்மையின், நாட்டுப் பெயர் பொறித்த என்றார், பெயர்-புகழ். பொறித்த எழுதிய ; நிலை நிறுத்திய என்றவாறு சூட்டு - நுதலணிகலன்.
    11. கொடிப்பூண் - நீண்ட வடிவினவாகிய அணிகலன்கள். ஆகம் - உடல்.
    12. வடி-மாவடு. 13.குலமகளிர் கொழுநரையன்றித் தெய்வமும் தொழுதலிலர் ஆகலின், அருந்தவர்க் காயினும் இறைஞ்சாது என்றார்.
    14. செங்கதிர்-ஞாயிறு.நெருஞ்சிப்பூ- எப்பொழுதும் ஞாயிற்று மண்டிலத்தையே நோக்குமியல்பிற்று. இதனை ''நெருஞ்சிப் பசலை வான்பூ ஏர்தரு சுடரின் எதிர்கொண் டாங்கு.' எனவரும் புறப்பாட்டானும் உணர்க (155)
    15 புகற்சி-விருப்பம். .நெருஞ்சி மலரினது விருப்பம் போன்ற விருப்பம் மிகுதலானே காதலற்கு அவாவும் காமத்தையுடைய நோக்கம் என்க.
    19. ஓவியர்-சைத்திரிகர். உட்கும்-அஞ்சும்.
    20. தேவியர்க்கெல்லாம் தேவி-மனைவியர்க்கெல்லாம் தலைவி என்றது வாசவதத்தையின் அன்னையாகிய கோப்பெருந்தேவியை.