உரை
 
2. இலாவாண காண்டம்
 
4. ஆறாந்திங்கள் உடன்மயிர் களைந்தது
 
           நாற்கயி றமைத்துக் கோற்கயிறு கொளீஇ
           நன்குநிலை பெற்ற நாற்பத் தையணங்
      40   குண்பதம் எட்டெட் டெண்வர வாங்கி
           எண்பத் தெழுகோற் றண்கையிற் றழீஇக்
           கணக்க மாந்தர் கயிறிட் டளந்த
           மணக்காற் பந்தருள் வடமென் மருங்குல்
 
        38 - 43 ; நாற்கயிறு,,,,,,,மருங்குல்
 
(பொழிப்புரை)   நான்கு. திசைகளிலும் கயிறு கட்டி இடம் வரைந்து கொண்டு பின்னர்க் கோலின்கண் கயிற்றைக் கொளுவி நாற்பத்தைந்து வகைத் தெய்வங்களும் நன்றாக நிலைபெற்று மடையுண்ணுமிடம் எட்டெட்டுக் கோலிடையிலே வரும்படியாக அக்கயிற்றை வளைத்து எண்பத்தேழு கோல் அளவிற்றாய்க் கணக்கர்கள் அளந்த மணக்கால்களையுடைய பந்தரின்கண் பூமகளின் இடையின் வடிவிற்றாக என்க.
 
(விளக்கம்) 40.. உண்பதம் - தெய்வங்கள் மடையுண்ணும் இடம், அவை ஒன்றற்கொன்று  எட்டு எட்டுக் கோலிடையனவாக அமையும் படிஎன்க. வாங்கி-வளைத்து .
    41. 'தண் கயிற்' என்றும் பாடம். 'தண் கையிற்றழீஇ' என்று வரும் சொற்றொடர் சிதைந்த தொடர் என்று தோன்றுகின்றது, ஆராய்க,
    43. வடமென் மருங்குல்-மேகலை வடமணிந்த பூமகளின் இடை.. இஃது ஆகுபெயராய், அப்பந்தருள் பூமகளின்  இடையெனக் கருதப்படுவதோர் இடத்தைக் குறித்து நின்றது. இதனை,
       "விரிந்து வான் பூத்தென விதானித்து ஆய்கதிர்
        அருங்கலப் பொடியினால் ஆய்பொற் பூமகள்
        மருங்குல்போற் குயிற்றிய நகரின் மங்கலப்
        பெருந்தவி சடுத்தனர் பிணையன் மாலையார்''     (2409)
எனவரும் சீவகசிந்தாமணிச் செய்யுட்கு நச்சினார்க்கினியார் வகுத்த நல்லுரையானும் இந்நூலாசிரியர் இக்காதையின்கண், 75-முதல் 82 ஆம் அடி ஈறாகக் கூறும் பகுதியானும் உணர்க.