உரை
 
2. இலாவாண காண்டம்
 
4. ஆறாந்திங்கள் உடன்மயிர் களைந்தது
 
          விசும்புறை தேவர் வேள்விச் சேதான்
          பசுஞ்சோற் றமலைப் பாசங் கொளீஇ
          மறுவின் றமைந்த நறுவெண் சாந்திற்
          பத்தியுங் கொடியும் பல்வழி எழுதி
    65    முத்தமு மணியுஞ் சித்திரத் தியற்றிய
          ஆடகப் பொன்னும் அகல்நில முதுபொழிற்
          றன்பெயர் கொளீஇய மன்பெருஞ் சீர்த்தி
          மரக்களி யன்ன திருத்தகு பொன்னும்
          இரத்தினக் குப்பையும் இலங்கொளிப் பவழமும்
    70    இன்னவை பிறவும் பன்முறை பண்ணித்
 
        61 - 70; விசும்புறை,,,,,.,,பண்ணி
 
(பொழிப்புரை) தேவர்கட்கும், வேள்விப் பசுவிற்கும், பசிய சோற்றுத்திரளையாகிய பலியினைக் கொடுத்துப் பின்னர், வெண்சாந்தினாலே பத்தியாகவும், கொடியுருவினவாகவும் பலவிடத்தும் கோலமிட்டு முத்தும் ஏனைமணியும் வைத்து ஓவியம்போல இயற்றப்பட்ட ஆடகப் பொன்னானும் சாம்பூநதப் பொன்னானும் பவழத்தானும் ஏனை மணிகளானும் இன்னோரன்ன பிறவற்றானும் பல்வேறு வகையினும் ஒப்பனை செய்து என்க.
 
(விளக்கம்) 61. விசும்புறை தேவர் - வானுலகத்தே வாழும் தேவர், பசு வழிபடுதற்குத் தன் சிறப்பு வகையான் அமரரோடு ஒக்கும் என்பது மெய்ந் நூற் றுணிவு ஆதலின் பசுவிற்கும் மடை கொடுத்து வழிபட்டனர் என்க, இதனை,
    'அமரர்கண் முடியும் அறுவகை யானும் ' என வரும் (தொல். புறத் - 29,) நூற்பாவினானும் நச்சினார்க்கினியர் நல்லுரையானும் உணர்க. வேள்விச்சேதான் - வேள்விக்குறிய சிவப்புப் பசு.
    62. அமலை - திரள்; கட்டி. அமலையாகிய பாசம் என்க. பாசகம் எனற்பாலது பாசம் என மருவிற்று. பாசகம் - உண்டி. சமைக்கப் பட்டது என்பது பொருள். ஈண்டுப் பலியுணவு. கொளீஇ என்பது கொடுத்தென்பதுபட நின்றது.
    64. பத்தி - நிரலாக உருவங்களை எழுதுவதொரு கோலவகை. கொடி - பூங்கொடி யுருவினவாய் எழுதும் கோலம்.
    65, முத்தும் ஏனைமணிகளும் வைத்து ஆடகப் பொன்னினும் சாம்பூநதப் பொன்னினும் சித்திரம்போல இயற்றப்பட்ட ஒப்பனைப் பொருள்களானும் ஒப்பனை செய்தென்க.
    66. ஆடகம்-நால்வகைப் பொன்னில் ஒன்று. 66 - 67 அகனில முதுபொழில் தன்பெயர் கொளீஇய மன்பெருஞ் சீர்த்தி மரக்களியன்ன திருத்தகுபொன் என்றது சாம்பூதப்பொன் என்றவாறு. முதுபொழில் - சாம்புத்தீவு ( நாவலந்தீவு ) ' நாவலொடு பெயரிய பொலம் ' என்றார் முருகாற்றுப்படையினும் (18) நால்வகைப் பொன்னையும்,
         'சாதரூபம் கிளிச்சிறை ஆடகம்
          சாம்பூநதம் எனஓங்கிய கொள்கையிற்
          பொலம்' (சிலப், 14 ; 201 - 3. )
எனவரும் சிலப்பதிகாரத்தானும் உணர்க.
    66 - 68.  'பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புநதம் ' என்பவாகலின் ( திருவள். மா.39 )  'மன்பெருஞ் சீர்த்தித் திருத்தகு பொன் ' என்றார். இப் பொன் மேருமலைச் சாரலிலுள்ள நாவல் மரத்தின் பழச்சாற்றானே ஆயது என்பவர்களின், மரக்களி அன்ன பொன் என்றார். மரக்களியாகிய அப் பொன் என்க. அன்ன என்பது உவமங் கருதாமல் சுட்டுமாத்திரையாய் நின்றது, மரம் ஈண்டு நாவல் மரத்தின் பழத்திற்கு ஆகுபெயர். களி - சாறு.
    70. பண்ணி-ஒப்பனைசெய்து,