உரை
 
2. இலாவாண காண்டம்
 
4. ஆறாந்திங்கள் உடன்மயிர் களைந்தது
 
          தமனியப் பேரில் தலைநிலந் தழீஇய
          கொழுங்களி உழுந்துஞ் செங்கதிர்ச் செந்நெலும்
          உப்பும் அரிசியும் கப்புரப் பளிதமொ
     90   டைவகை வாசமுங் கைபுனைந் தியற்றிய
          முக்கூட் டமிர்தும் அக்கூட் டமைத்துத்
          தேனும் பாலுந் தயிருங் கட்டியும்
          ஆனெயும் வெண்ணெயும் அனையவை பிறவும்
          பதினறு மணியும் பைம்பொன் மாலையும்
     95   நுதியிற் பெய்து விதியுற இரீஇப்
 
        86 - 95; நாற்பெரு வாயின்.....இரீஇ
 
(பொழிப்புரை) நான்கு பெருவாயிலிடந்தோறும் உள்ள பொன்னாலியன்ற பேரில்லின் நிலத்தைப் பொருந்தும்படி உழுந்து நெல் முதலியவற்றையும் ஐவகை மணப் பொருள்களையும் அழகுபடச் செய்த முக்கூட்டினையும் குவித்து அவற்றின் உச்சியிற் குழித்துத் தேன் முதலியவற்றையும் பெய்து முறைப்படி இருத்திய பின்னர் என்க.
 
(விளக்கம்) 86 அந் நன்னகரின் பெருவாயில் நான்கனிடத்தும் ஏற்ப இயற்றப்பட்ட தமனியப்பேரில் என்க
    87 தமனியப்பேரில்-பொன்னாலியற்றப்பட்ட பெரிய இல்லம் தழீஇய - செய்யிய என்னும் வாய்பாட்டெச்சம்; பொருந்தும்படி என்க.
    89. கப்புரப் பளிதம் - இருபெயரொட்டு. கருப்பூரமாகிய பளிதம்.
    90. ஐவகை வாசம்  'தக்கோலம் ஏலம் இலவங்கம் கப்பூரம் சாதிக்காய்' என்னுமிவை
    91. முக்கூட்டமிர்து-களிப்பாக்கு தேன் இளநீர் என்னும் மூன்றானும் இயற்றியதோர் உணவு. இதனை,
     'அங்கருங் காலி சீவி ஊறவைத் தமைக்கப் பட்ட
      செங்கனி விராய காயுஞ் செம்பழுக் காயுந் தீந்தேன்
      எங்கணுங் குளிர்த்த இன்னீர் இளம்பசுங் காயு மூன்றும்
      தங்களி செய்யக் கூட்டித் தையலார் கைசெய் தாரே'
எனவரும் சீவகசிந்தாமணியானும் உணர்க (சீவ..2473).
    92. கட்டி - வெல்லம்.
    93. ஆனெய் - என்றது உருக்கிய நெய்யினை,
    94. பதினறுமணி என்றது பதினாறு கோவையினையுடையதொரு அணிகலனை; பதினாறுகோவை மணிமாலை பொன்மாலை ஆகிய அணிகலன்களையும் அவற்றின் உச்சியிலே பெய்து என்பது கருத்து
    95; நுதி - உச்சி என்க, விதி - நூன்முறை. இரீஇ-இருத்தி.  வைத்தென்க
      'உழுந்து பயறுப்பரிசி அப்பம் அருங்கலங்கள் கொழுந்துபடக் கூப்பி நனி ஆயிரமரக்கால், செழுந்துபடச் செந்நெல் நிறைத்து அந்நுண்கொடி அறுகின் கொழுந்து குறைத்து அணிந்து கொலைவேற் கணவரமைத்தார்' (சீவக. 2416) என்றார் திருத்தக்கதேவரும்.