உரை
 
2. இலாவாண காண்டம்
 
4. ஆறாந்திங்கள் உடன்மயிர் களைந்தது
 
          அகன்மனைக் காவல் ஆற்றுளி நிறீஇ
         எண்டிசை மருங்கினும் இவர்திரை ஏய்ப்பக்
         கண்டப் பூந்திரை காழ்முதற் கொளீஇ
   135    எழுதுவினைக் கம்மத்து முழுமுதற் கோத்த
         முத்த மாலை முடிமுதல் வருட
         ஒத்த ஓரை நோக்கி ஓங்கிய
         கைத்தொழில் நுனித்த வித்தக வாளர்
         பொன்புனை நன்கலத் தின்பதம் ஆர்ந்தபின்
 
        ( 132 - 139 ; மணமக்கள் பாற்சோறுண்ணல் )
           132 - 139 ; அகன்மணை காவல்.......ஆர்ந்தபின்
 
(பொழிப்புரை) அகன்ற அம்மங்கல மணைக்குப் பாதுகாவலாக மகளிரை நூன்முறைப்படி வாளோடு நிறுத்தி எட்டுத் திசைகளிலும் கடல் அலைபோன்று வண்ணப்பூந்திரைகளை வளைத்துக் கழிகளிலே கட்டி எழுதிய சித்திரத்தின் முடியிலே கோத்து நாற்றிய முத்துமாலைகள் தம் முடியிடத்தை வருடா நிற்பப் பொருந்திய நல்ல முழுத்தத்திலே பொன்னாலியற்றிய அழகிய உண்கலங்களிலே இனிய பாற் சோற்றை உண்டபின்னர் என்க.
 
(விளக்கம்) 132. அகன்மனை என்றும் பாடம், மணை என்ற பாடமே சிறந்ததாம்: மங்கலமணைக்குக் காவலாக மகளிரை வாளோடு நிறுத்துதல் சீவக சிந்தாமணியினும் கண்டது. அது,
    ''வெள்ளுருவ மாலை வடகீழ் இருவர் மின்போல் ஒள்ளுருவ வாள் உருவி நின்றார் '' (சீவக. 2488) என வருதல் அறிக.
    ஆற்றுளி - விதிப்படி. இவர்திரை - காற்றால் இயங்கும் கடலலை. இது காற்றான் அசையும் கண்டத்திரைச் சீலைக்குவமை.
    134. கண்டப்பூந்திரை - பலவண்ணத்திரைச்சீலை. காழ்-கழி
    135. கம்மம்: ஆகுபெயர். ஓவிய உருவம், கம்மத்தின்கண் முழுதாகக் கோத்த முத்தமாலை தம்முடியை வருட என்க.
    138 - 139. தங் கைத்தொழிலைக் கூரிதாகக்கற்ற சதுரப்பாடுடைய  கம்மியரானே பொன்னாலியற்றப்பட்ட நல்ல உண்கலத்திலே என்க,
    137. ஓரை-முழுத்தம் 139. இன்பதம் - இனிய பாற்சோறென்க.