உரை
 
2. இலாவாண காண்டம்
 
4. ஆறாந்திங்கள் உடன்மயிர் களைந்தது
 
         
     140  மணியறைந் தன்ன மாண்இருங் குஞ்சி
          அணிவலஞ் சுரிந்த அமைதிக் கேற்ப
          வளர்பிறை அன்ன மல்லிகைக் கத்திகை
          கிளர்பொன் போதொடு களையறப் பிணித்த
          வாக்கமை சிகைமுதற் பாற்பட அடைச்சி
     145   மகரங் கவ்விய மணிக்குழைக் காதினர்
          தகரங் கலந்த தண்ணறுஞ் சாந்தினர்
          பானிற வெண்டுகில் ஆனத் தானையர்
          இறைமகற் கியன்ற குறைவில் செல்வமொ
          டந்தணர் ஈண்டி அடித்துகள் ஆற்றி
 
        ( 140 - 160  அந்தணர் வாழ்த்துதல் )
      140 - 149 : மணியறைந் தன்ன அந்தணர்...........ஈண்டி
 
(பொழிப்புரை) நீலமணியைப் பதித்துவைத்தாற் போன்றகரிய நிறமாட்சியோடே வலம் சுரிந்த குஞ்சியின் அமைதிக்குத்தகப் பொற்பூவோடே பிணைக்கப்பட்ட மல்லிகை மாலையினைச் செருகிய திருத்தமுடைய சிகையினையும், மணிக்குழையையுடைய காதினையும், நறுஞ்சாந்தினையும், தானையினையும், உடைய அந்தணர் பலர் மன்னன் மகனுக்குச் செய்யவேண்டிய பொருள்களானே குறைவிலராய் வந்து குழுமி என்க.
 
(விளக்கம்) 140. மணி - நீலமணி. மாண் - மாட்சிமையுடைய.
    141. அணி-அழகாக. சுரிந்த -சுருண்ட.
    142- பிறை-மல்லிகை மாலைக்குவமை. கத்திகை- மாலை.
    143, பொற்போது - பொற்பூ. பொற்போதொடு பிணைத்த மல்லிகைக் கத்திகை என்க.
    144. வாக்கு-திருத்தம். சிகை - குடுமி. பாற்பட - கூறுபட. அடைச்சி - செருகி. செருகித் திருத்தமுற்ற சிகையினையுடைய என்க.
    145. இருமகரமீன் ஒன்றனை ஒன்று கவ்விக். கொண்டிருத்தல் போன்று இயற்றப்பட்ட மணிக்குழை என்க.
    146. தகரம் - மயிர்ச்சாந்தம்.
    147. ஆனத்தானை ? ஆணத்தானை என்றும் பாடம். தானை - ஆடை.
    148. இறைமகன் ; .உதயணன். இறைமகனை வாழ்த்துதற்கேற்ற அறிவுச் செல்வமுடையவர் எனினுமாம்,