உரை
 
2. இலாவாண காண்டம்
 
4. ஆறாந்திங்கள் உடன்மயிர் களைந்தது
 
          டந்தணர் ஈண்டி அடித்துகள் ஆற்றி
     150   மந்திர விதியின் வாய்ப்பூச் சியற்றித்
          தந்தொழின் முடித்துத் தலைவனைக் குறுகி
          வெண்ணிற மலருந் தண்ணறுஞ் சாலியும்
          புண்ணியப் புல்லும் பொன்னொடு முறைமையின்
          மண்ணார் மணிப்பூண் மன்னனொடு மாதரைச்
     155   சென்னியும்  உச்சியும் சேடுபடத் தெளித்துக்
          கூப்பிய கையர் காப்பொடு பொலிந்த
          அமரரு முனிவரும் அமர்வன ராகி
          ஆயுளுந் திருவும் போகமும் பொலிவும்
          மேயின தருகென மிகப்பல வாழ்த்தி
     160   மறையிற் கிரிகையின் முறையறிந் தோதி
 
        149 - 160 ; அடித்துகள் ஆற்றி,,,.,..முறையறிந் தோதி
 
(பொழிப்புரை) அடிகளைக் கழுவி மந்திரங்கூறி வாய்பூசித் தந்தொழிலை முடித்தபின்னர் உதயணகுமரனை அணுகி வெள்ளிய மலர் முதலியவற்றை அவ்வுதயணனும் வாசவதத்தையுமாகிய இவர் தம் சென்னியிடத்தே உச்சியின்கண் பெருமையுண்டாகத் தெளித்துக் கைகுவித்து நின்று ''காவற்றொழிலோடே பொலிவுடைய தேவர்களும் முனிவர்களும் நும்மைப் பெரிதும் விரும்பினராய் வந்து நுங்கட்கு ஆயுளும் செல்வமும் நுகர்ச்சியும் பொலிவும் அருள்க'' என்று மிகவும் வாழ்த்தி மறையின்கண் ஓத வேண்டுவனவற்றை அச்சடங்கு முறையினை உணர்ந்து ஓதா நிற்ப என்க.
 
(விளக்கம்) 149. அடித்துகள்  ஆற்றி என்றது கால்களைத் தூய்மைசெய்து என்றவாறு.
    150. மந்திரவிதியின் வாய்ப்பூச்சியற்றி என்றது ஆசமனஞ்செய்து என்றவாறு.
    151. தந்தொழில் - தமக்குரிய நியமத்தொழில் என்க,
    152, தலைவன் ; உதயணன். மங்கலச்சடங்காகலின் வெண்ணிற மலர் கூறிற்று. குளிர்ந்ந நறிய நெல் என்க,
    153, புண்ணியப்புல் என்றறு அறுகம்புல்லை.
    154. மண்ணார் மணி-கழுவுதல் அமைந்த மணி. மாதர் ; வாசவதத்தை.
    155. சென்னியிடத்தே உச்சி என்க. சேடு -பெருமை ; அழகுமாம்,
    157. அமர்வனர் - விருப்பமுடையோராய்,
    158. பொலிவு - அழகுடைமை ; புகழுடைமையுமாம்.
    160. வேதத்துட் கூறப்பட்ட செயல்முறை என்க. ஓதி என்பதனைச்
  செயவெனெச்சமாகுக