உரை
 
2. இலாவாண காண்டம்
 
4. ஆறாந்திங்கள் உடன்மயிர் களைந்தது
 
         
     200  அருங்கல வெறுக்கை ஆர வீசி
          விருப்புறு மனத்தவர் விண்ணவர் காப்ப
          மன்னுக வேந்தே மண்மிசை நீடென
          அன்னவை கலந்த ஆர்வ நாப்பண்
          எண்ணுவரம் பறியா இன்பச் செல்வமொடு
     205  மண்ணுவினை முடிந்தன்றான் மயிர்வினை மகிழ்ந்தென்.
 
        199 - 205 ; பல்லோர்,,,..,மயிர்வினை மகிழ்ந்தென்
 
(பொழிப்புரை) பலரும் பேரணிகரன்களாகிய பொருள்களை நிரம்ப வழங்கி விருப்பமிக்க உள்ளத்தவராய் வேந்தே ! 'நீ நின் தேவியொடு இவ் வுலகத்தின்மேல் எண்ணவரம்பறியாத இன்பமும் செல்வங்களும் பெற்று அன்பினூடே மகிழ்ந்து தேவர்கள் பாதுகாவாநிற்ப நீடுழி நிலைபெறுக!' என வாழ்த்தாநிற்ப உட.ன் மயிர்களைதல் என்னும் சடங்கு முடிந்தது என்க.
 
(விளக்கம்) 220. அருங்கல வெறுக்கை; பண்புத்தொகை, அருங்கலம் - பேரணிகலம். வெறுக்கை - பொருள். 203. அன்னவை - எண்ணுவரம்பறியாச் செல்வங்கள், செய்யுளாகலின் சுட்டு முதலில் வந்தது. செல்வத்தூடேயும் அவை கலந்த அன்புடைமையின் ஊடேயும் மகிழ்ந்து நீடு மன்னுக என்க.

          4. ஆறாந்திங்கள் உடன்மயிர் களைந்தது முற்றிற்று