உரை
 
2. இலாவாண காண்டம்
 
5. மண்ணூநீராட்டியது
 
           தண்ணெழில் நடுவண் நுண்எழில் நுனித்த
           அயின்முனை வாளும் வயிரத் தோட்டியும்
           கொற்றக் குடையும் பொற்பூங் குடமும்
           வலம்புரி வட்டமும் இலங்கொளிச் சங்கும்
           வெண்கண் ணாடியும் செஞ்சுடர் விளக்கும்
     30    கவரியுங் கயலுந் தவிசுந் திருவும்
           முரசும் படாகையும் அரசியல் ஆழியும்
           ஒண்வினைப் பொலிந்த ஓமா லி்கையுமென்(று)
           எண்ணிரண் டாகிய பண்ணமை வனப்பிற்
           கடிமாண் மங்கலங் கதிர்வளை மகளிர்
     35    முடிமிசை ஏந்தி முன்னர் நடப்ப
           வேலும் வாளுங் கோலுங் கொண்ட
           காவல் இளையர் காவல் கொள்ள
 
        (25 - 37. மங்கலங்கள் பதினாறும் எந்திவரும் மகளிர்)
             25 - 37 ;  தண்ணெழில்...,......,..கொள்ள
 
(பொழிப்புரை) வாள்முதலிய பதினாறுவகை மங்கலப் பொருள்களையும் ஒளியுடைய வளையலையணிந்த மகளிர் தம் முடிமேல் ஏந்தி முற்பட நடவாநிற்பவும், வேல் முதலிய படைகலன்களை ஏந்திய காவன்மறவர் தங்காவற் றொழிலை மேற்கொண்டு வரவும் என்க.
 
(விளக்கம்) மங்கலங்கள்பதினாறாவன; வாள்,தோட்டி, குடை, பொற்குடம்,  ஆலவட்டம், சங்கு, கண்ணாடி,  விளக்கு, சாமரை, பொன்மீன், பொற்றவிசு, பொன், முரசு, கொடி, சக்கரம், ஓமாலி கைத்திரள் என்பன.
    25. நுண்எழில் நுனித்தவாள்,  அயின்முனைவாள் எனத்  தனித் தனி கூட்டுக. நுண்ணிய அழகுடையதாகச்  செய்யப்பட்ட வாள், கூர்முனை வாள் என்க.
    26, தோட்டி - அங்குசம்,
    27,  கொற்றம் - வெற்றி , பொன்னாலாகிய அழகிய குடம் என்க.
    28, வலம்புரி வட்டம்-வலம்புரி வடிவம் பொறிக்கப்பட்டதோர்  ஆலவட்டம் என்க.   
    30.கவரி-சாமரை, கயல்-பொன்னாலாகிய. கெண்டை. 30, திரு என்றது பொன்மணி முதலியன பெய்யப்பட்ட பேழை என்றவாறு
    31, படாகை -கொடி,
    32, ஒள்ளிய தொழிற்றிறத்தாலே பொலிவுற்ற ஓமாலிகை என்க. அவையாவன;  இலவங்கம் பச்சிலை கச்சோலம் ஏலம் நாகணம் கோட்டம் நாகம் மதாவரிசி தக்கோலம் நன்னாரி வெண்கோட்டம் கத்தூரிவேரி இலாமிச்சம் - கண்டில் வெண்ணெய் கடுநெல்லி தான்றி துத்தம் வண்ணக் கச்கோலம் அரேணுகம் மாஞ்சி் சயிலேகம் புழுகு நறும்புன்னை நறுந்தாது புலியுகிர் சரளம் தமாலம் வகுளம் பதுமுகம் நுண்ணேலம் கொடுவேரி என்பனவாம். இவற்றின் தொகுதியை ஒரு மங்கலம்  என்றவாறு.
    37. காவலிளையர் - காவற்றொழிலையுடையர்; மறவர்.