உரை
 
2. இலாவாண காண்டம்
 
5. மண்ணூநீராட்டியது
 
         
     65    சங்கினும் பாலினுஞ் சலமில் வாய்மை
           விழுத்திணைப் பிறந்த ஒழுக்குடை மரபினர்
           நெய்தலைப் பெய்தற் கெய்திய சிறப்பணி
           எந்திய சென்னி மாந்தர் கூடி
           அறுகைப் புல்லினும் வாகைத் தளிரினும்
     70    நறுநெய் தோய்த்து முறைமுதல் நீவி்
 
        (65 - 69,  உதயணனுக்குச் சான்றோர் நெய்யணிதல்.)
       65 - 70 ;  சங்கினும் பாலினும்.....,..முறை முதல் நீவி
 
(பொழிப்புரை) சங்கும் பாலும்போல இன்னல் எய்துங்காலத்தும் தம் பண்பு குன்றாத வாய்மையுடைய உயர்குடிப்பிறந்த நல்லொழுக்கமுடையவரும்; நெய்யேற்றுதற் சடங்கிற்குரிய சிறப்பணிகலன்களை அணிந்தவருமாகிய சான்றோர் பலரும். வந்து கூடி, அறுகம்புல்லையும் வாகைத்தளிரையும் நறிய நெய்யிடத்தே தோய்த்து முறைமைப்படி தலையின்மிசைத்தடவி என்க.
 
(விளக்கம்) "அட்டாலும்பால்சுவைகுன்றாமை போலவும், சுட்டாலும் சங்கு வெண்மை கெடாமை போலவும்" துன்புமுற்ற காலத்தும் தம் நற்பண்பாகிய வாய்மை கெடாத உயர்குடிப் பிறப்பினர் என்பார், ''சங்கினும் பாலினும் சலமில் வாய்மை'' என்றார். இந் நலம் குடிப்பிறப்பாலே உண்டாதலின் அதனை உயர்குடிக்கேற்றிக் கூறினார்.
    சலமில் வாய்மை என்றது எக்காரணத்தாலும் திரிதலி்ல்லாத நற்பண்பு என்றவாறு. பொய்மை திரிபுடைமையில் திரிபின்மையை வாய்மை என்றார்,
       'வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
       பண்பிற் றலைப்பிரிதல் இன்று'     (குறள்-954)
என்றார் பொய்யா மொழியாரும்.
    99. அறுகைப்புல்- அறுகம்புல்.