|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 5. மண்ணூநீராட்டியது | | கொண்டோன் வேட்குங் குறிப்பினை
யாகித் தண்டாப்
புலமொடு மகளிரைத் தழீஇத்
திருமனைக் கிழமையின் ஒருமீக்
கூரிக் கற்புமேம்
படீஇயர் பொற்றொடீ பொலிந்தென 95
நற்பல கிளவி பற்பல பயிற்றி
நெய்தலைப் பெய்த பின்றை மெய்வயின்
| | 91 - 96 ;
கொண்டோன் வேட்கும்.,......பெய்த பின்றை
| | (பொழிப்புரை) பொற்றொடீ.!நீ
நின் கணவனை யாண்டும் விரும்புதற்குக் காரணமான குறிப்பினையுடையையாய்க்
குறையாத அறிவினை உடையையாய்ப் பிற மகளிரை அன்பானே தழுவிக்கொண்டு
மனைக்கிழந்திக்குரிய உரிமையின்கண் மிகவும் உயர்ந்து திகழ்ந்து
கற்புடைமையானே மேம்படுக! என்றின் னோரன்ன நன்றாகிய பல
வாழ்த்துரைகளைக் கூறி நெய்யேற்றுதலாகிய சடங்கினை நிகழ்த்திய பின்னர்
என்க! ,
| | (விளக்கம்) 91,
கொண்டோன்-கணவன்.குறிப்பு-கொள்கை,
''பெற்றோற்பெட்கும்பெரும்பிணையாகென'' என்றார் பிறரும். (அகநா,86,) இனி,
கொண்டோன் நீன்னை எஞ்ஞான்றும் விரும்புதற்குக் காரணமான குறிப்புகளை
உடையை ஆகென எனினுமாம். 92. தண்டாப்புலம்.-
குறையாத அறிவு; நிலம் என்பாருமுளர். மகளிர் - சுற்றத்தாரும்
ஏதிலருமாகிய பிற மகளி்ர் என்க. 93. மனைக்கிழமை -
நன்மனைவிக்குரிய உரிமைகள். 94. மேம்படீஇயர்-மேம்படுக;
வியங்கோள் வாழ்த்துதற்கண் வந்தது.
|
|