உரை
 
2. இலாவாண காண்டம்
 
5. மண்ணூநீராட்டியது
 
           வெய்யொன் கதிரொளி வீசுவளி நுழையா
           இரும்பணி பெற்ற அரும்பணைப் படுகால்
     135    மேற்புலம் அமைந்த விளங்குமணி வேயுள்
           யாப்புறு மண்டபத் தாசனத் திரீஇக்
           கோப்புறு விழுக்கலம் ஏத்துவனர் காட்டிக்
 
                 [ஒப்பனை செய்யுமிடம்]
      133 - 137 ;  வெய்யோன் கதிரொளி.......ஏத்துவனர் காட்டி
 
(பொழிப்புரை) ஞாயிற்றின்வெயிலும்காற்றும்உள்ளே புகுதற் கியலாதவாறு இரும்பாலே அழகுறச்செய்த மிகப்பெரிய படிக்கட்டுகளோடே மணிகள் பதித்த வேயுளையும் உடையதாய் இயற்றப்பட்டதொரு மண்டபத்தின்கண்ணே இடப்பட்டதொரு இருக்கையின்கண் அழைத்துவந்து இருத்திக் கோவை செய்யப்பட்ட சிறந்த அணிகலன்களைக் கொணர்ந்து அவ்வுதயணகுமரனுக்கு வணங்கிக் காட்டி என்க.
 
(விளக்கம்) 133. வெய்யோன் - ஞாயிறு. கதிரொளி ; பண்புத்தொகை,வீசுவளி; வினைத்தொகை. இவ்வடியோடே

     "கறங்கு கால் புகா கதிரவன் ஒளிபுகா மறலி
     மறம்புகாதினி வானவர் புகாரென்கை வம்பே"
     ............   .....................   ......................................
     அறம்புகாதிந்த அணிமதிட்.கிடக்கைநின் றகத்தின்"
                                 (கம்ப-ஊர்தேடு, 23)
எனவரும், கம்பநாடர் செய்யுளை ஒப்புக் காண்க,
    அணிகலன் இருக்கு மண்டப மாகலின் அதன் திண்மையை விதந்து கூறிற்று
  134. இரும்பாலே சுவரமைத்து அணிபெற்ற படுகாலையுடையது
  என்க. பணை -பருமை, படுகால்-படிக்கட்டு.
  135. மேற்புறம்
  விளங்குமணி அமைந்த வேயுள் என மாறுக. வேயுள்-கூரை.
  136. யாப்புறு-கட்டுதலுற்ற.
  137, .கோப்பு - கோவை. விழுக்கலம் - சிறந்த அணிகலன். ஏத்துவனர்; முற்றெச்சம்.