உரை
 
2. இலாவாண காண்டம்
 
5. மண்ணூநீராட்டியது
 
          ஆராக் காதல் அவந்திகை தன்னையும்
          நீராட் டிடத்தின் நீக்கி நடுவிற்குப்
          பாரம் ஆகிய பல்காசு புதைஇ
          ஈர நுண்டுகில் அகற்றி ஏருடைக்
     165   கோடிப் பூந்துகில் கொய்து விளிம்புரீஇச்
          சேடார் அல்குல் சேடுபட உடீஇ
          வல்லவர் வகுத்த மல்வினை நகர்வயின்
          பொன்மணைப் பொலியப் போற்றுவனர் இரீஇ
 
        ( 161 - 183.வாசவதத்தையை ஒப்பனைசெய்தல் )
           161 - 168 ;  ஆராக் காதல்,,,,,,,இரீஇ
 
(பொழிப்புரை) இனி, தணியாத காதலையுடைய வாசவதத்தையினையும் கோலவித்தக மகளிர் மங்கலநீராடிய இடத்தினின்றும் அகற்றிப் பலவாகிய பொற்காசுகளானாய வடம் அணியப்பட்டு இடைக்குச் சுமையாக அமைந்த ஈர ஆடையினை அகற்றி அழகிய புத்தாடையினைக் கொய்து வளிம்பினை உருவி அழகு நிறைந்த அல்குல் மேலும் அழகெய்தும்படி உடுத்து அழைத்துக் கொணர்ந்து ஒப்பனைமண்டபத்தின்கண்ணே இடப்பட்ட தொரு பொன் இருக்கையில் பேணியிருக்கச் செய்த பின்னர் என்க.
 
(விளக்கம்) 161. ஆரா - தணியாத. அவந்திகை - அவந்தி மன்னன் மகள்; கிளிபோன்றவளுமாம். அவந்தி - கிளி (பிங்கலநி.  3099) அவந்திகை தன்னையும் என்புழி உம்மை இறந்ததுதழீஇயிற்று.  
    162 நீராட்டிடம் - நீராட்டுமண்டபம்.
    163. பல்காசு புதைஇ நடுவிற்குப்பாரமாகிய ஈரநுண்டுகில் எனமாறுக, பல்காசு கோத்த வடம் என்க, நடு - இடை.
    164, துண்டுகில் - நுண்ணிய ஆடை. புதைஇ - புதைக்கப்பட்டு.ஏர் - அழகு.
    165. கோடிப்பூந்துகில் - பூத்தொழிலமைந்த புத்தாடை. உரீஇ - உருவி,
    166. சேடு - அழகு ; பெருமையுமாம்
    167. வல்லவர் - தொழில்வன்மையுடைய சிற்பியர். மல்லல் வினைநகர் எனற்பாலது, மல்வினைநகர் என அல்லீறு, குறைந்தது நின்றது மல்லல் - அழகு, வளப்பமுமாம். வளவிய தொழிற்றிறனமைந்த ஒப்பனை மன்றம் என்க.
    168. பொன்மனை என்றும் பாடம் போற்றுவனர்; முற்றெச்சம். இரீஇ - இருத்தி.