|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 5. மண்ணூநீராட்டியது | | நன்மணக் கோலத்துக் கைந்நல
நுனித்த 170 அங்கலுழ்
பணைத்தோள் மங்கல
மகடூஉக்
கட்டிய கச்சையள் கைவிரல்
கூப்பி
நெட்டிருங் கூந்தல் நீரற
வாரிப்
பன்னுமுறை விரித்துப் பின்னுபு
தொகுத்துக்
கோட்டிடை வளைஇய குஞ்சரத் தடக்கையிற்
175 சூட்டொடு விரைஇச் சுற்றுபு
முடித்துப்
பத்திப் பலகைப் பரிசரக்
கைவினை
வித்தகப் பத்தி வேறுபட
விரித்தவை
ஒழுக்கமுறை அறிந்து வழக்கிலள் வைத்து
முடிக்கல முதலா முறைமுறை
தோன்றும் 180 அடிக்கலம்
ஈறா அணிந்தழகு பெறீஇ | | 169 - 180 ;
நன்மணக் கோலத்து.............பெறீஇ
| | (பொழிப்புரை) அம்மகளிருள்
நன்றாகிய மணக்கோலஞ் செய்தலிலே கைவன்மையுடையவளும் அத் துறையினைக்
கூரிதாகக் கற்றவளும், அழகொழுகும் தோளினையுடையவளும்,
கச்சையணிந்தவளும், சுமங்கலமுடையவளும் ஆகிய ஒருத்தி கைகூப்பித் தொழுது,
பின்னர் வாசவதத்தையின் கூந்தலை ஈரம்புலர வாரிப் பன்னுமுறையானே பன்னி
விரித்துப் பின்னிச் சேர்த்து மருங்கின்மேல் வளைத்துப் போகட்ட
யானையினது பெரிய கையினைப் போலக் கொண்டைப் பூமாலையினை யிட்டு
வளையச்சுற்றி முடித்து, பத்தி முதலிய தலைக்கோலங்களை வேறுபட விரித்து
ஒழுங்கு படத் தப்பின்றி அணிந்து மேலும் முடிக்கலன் முதல் அடிக்கலன் ஈறாக
அணிந்து அழகுசெய்து என்க.
| | (விளக்கம்) 169,
கைந்நலம் - ஒப்பனை நன்மை 170. அம்கலுழ் -
அழகொழுகாநின்ற, பணைத்தோள் - மூங்கிலை ஒத்ததோள். மங்கல மகடூஉ -
சுமங்கலி. மகடூஉ - மகள், 172. நெட்டிருங் கூந்தல் - நெடிய
கரிய கூந்தல். வாசவதத்தையின் கூந்தல் என்க. 173,
பன்னுமுறை - வகுக்கும் முறை. பின்னுபு - பின்னி, 174.
யானைக்கை; பின்னலுக்குவமை, வளை இய - வளைத்ததுப்போகட்ட. 'முத்தார்
மருப்பினிடை வளைத்த முரண்கொள் யானைத் தடக்கையின் ஒத்தேருடைய
மல்லிகையின் ஒலியன் மாலை உறுப்படக்கி வைத்தார்.'' (சீவக. 2693.)
என்றார் திருத்தக்க தேவரும். 175.
சூட்டு - கொண்டைப்பூமாலை. விரைஇ- கலந்து. சுற்றுபு - சுற்றி.
176. பத்திப்பலகை, பத்தி என்பன
தலைக்கோலவகைகள்.பரிசாரகர்களாலே செய்யப்படுதலின் ஒப்பனைத்தொழில்
பரிசரக் கைவினை எனப்பட்டது. பரிசாரம் -
பணித்தொழில் 178, வழுக்கு - தப்பு, வழுக்கிலள்;
முற்றெச்சம். 179. முடிக்கலம் - தலையணிகலன்;
(மோலி) 180. அடிக்கலம் - சிலம்பு முதலியன.
|
|