உரை
 
2. இலாவாண காண்டம்
 
5. மண்ணூநீராட்டியது
 
           வாச நறுஞ்சாந்து வகைபெறப் பூசி
           மாசில் திருமகள் வண்ணம் பழிப்பதோர்
           கோலஞ் செய்து கொண்டகம் புக்குக்
           கடிநகர் வரைப்பிற் கல்லென் சும்மையொ
     185   டடிசில் அயினி ஆர்பதம் அயின்று
           மன்பெரும் போகத்து மகிழ்ந்து விளையாடி
           இன்புற் றனரால் இருவரும் இயைந்தென்.
 
        181 - 187 ; வாச நறுஞ்சாந்து.,..............இருவரும் இயைந்தென்
 
(பொழிப்புரை) மணமுடைய நறிய சாந்தங்களையும் கூறுபாடுண்டாகப் பூசி இங்ஙனமாகத் திருமகள் அழகினையும் பழிக்கத்தகுந்ததோர் அழகினைச் செய்து அழைத்துக்கொண்டு இல்லத்திற் புக்கபின்னர் அத் திருமணவில்லத்தின்கண் கல்லென இசைக் கருவிகள் முழங்காநிற்ப மங்கலஉண்டியை உண்டு, உதயணகுமரனும் வாசவதத்தையுமாகிய மணமக்கள் இருவரும் உடலானும் உளத்தானும் ஒன்றுபட்டு மகிழ்ந்து விளையாடி நுகர்ச்சியின்கண் பெரிதும் இன்புறாநின்றனர் என்க,
 
(விளக்கம்) 182, மாசில் திருமகள் - குற்றமற்ற இலக்குமி. வண்ணம் - அழகு,
    184. கடிநகர் - திருமண வில்லம். சும்மை -  ஆரவாரம்,
    185. அடிசிலும் அயினியாகிய ஆர்பதமும் அயின்  றென்க. அடிசில் - நால்வகை உணவுப் பொதுப்பெயர். அயினி - சோறு, உண்டி; பதம் - சோறு. மங்கலச்சோறென்பது தோன்ற  விதந்தோதினார்.

                    5. மண்ணுநீராட்டியது முற்றிற்று.