உரை
 
2. இலாவாண காண்டம்
 
6. தெய்வச் சிறப்பு
 
           மேவரப் புனைந்த
          பசும்பொன் அலகிற் பவழத் திரள்கால்
          விசும்பிவர் மதியுறழ் வெண்பொன் போர்வைத்
          தாம நெடுங்குடை தகைபெறக் கவிப்பக்
    15    காமர் கோலங் காண்மின் நீரென
          ஏமச் செங்கோல் ஏயர் பெருமகன்
          செம்பொன் செருப்பிற் சேவடி இழிந்து
          வெண்பூ நிரந்த வீதியுள் இயங்கி
          நகர்வலங் கொள்ளும் நாள்மற் றின்றெனப்
    20    பகலங் காடியிற் பல்லவர் எடுத்த
 
        11-20; மேவரப்புனைந்த............,எடுத்த
 
(பொழிப்புரை)  மேன்மையுண்டாக ஒப்பனை செய்யப்பட்ட பொற்கம்பிகளையும் பவழத்தாலாய திரண்ட காம்பினையும் வானிடத்தே இயங்கா நின்ற திங்கள்மண்டிலம்போற் றோன்றும் வெள்ளிப் போர்வையினையும் மாலைகளையும் உடைய நெடிய குடை அழகுபெற நிழற்றா நிற்ப, உயிர்கட்குப் பாதுகாவலான செங்கோலையுடைய ஏயர்குலத் தோன்றலாகிய நம் உதயண வேந்தன் தனது பொற் செருப்பினின்றும் நீங்கி'' எமது அழகிய திருமணக் கோலத்தை எல்லீரும் கண்டு களிமின் என்று அருள் செய்து வெள்ளிய மலர் பரப்பிய வீதியின்கண் நடந்து நகர்வலஞ் செய்தருளும் நன்னாள் இஃதென்று பலரும் மகிழ்ந்து பகலங்காடியின் கண் உயர்த்திய என்க.
 
(விளக்கம்) 11. மே-மேன்மை. 
    12. பசும்பொன் அலகு-பசிய பொன்னாற் செய்த கம்பி (சலாகை) பவழத்தால் இயற்றப்பட்ட திரண்ட (குடைக்) காம்பு என்க,
    13. விசும்பு இவர் மதி உறழ் - வானத்தில் இயங்கா நின்ற திங்களைப்போற்றோன்றும், வெண்பொன்-  வெள்ளி, போர்வை குடையின்மேற் போர்க்கப்பட்ட ஆடை.
    14. தாமம்-மாலை, தகை-அழகு. கவிப்ப-நிழற்ற.
    15. காமர் -அழகு. கோலம்-திருமணக் கோலம்,
    16. ஏமம் - பாதுகாவல். இன்பஞ்செய்யும் செங்கோலுமாம்
    17, இழிந்து -இறங்கி ; நீங்கி,
    18, நிரந்த - பரப்பப்பட்ட என்க.
    19. நாள் - நன்னாள் என்று மகிழ்ந்து  என்க,
    20. பகலங்காடி  - பகற் காலத்தே விற்கும் கடைத்தெரு. அல்லங்காடியும் உண்மையின் பகலங்காடியின் என்றார். உயர்த்திய, ( 21 ) பல்வேறு கொடியும் எனத் தொடரும்.