உரை
 
2. இலாவாண காண்டம்
 
6. தெய்வச் சிறப்பு
 
          பரூஉப்பணைப் பளி்ங்கிற் பட்டிகை கொளீஇ
          வேற்றொழில் பொலிந்த மாற்றுமருங் கமைத்துக்
          காம்புங் கதிருங் கூம்புமணிக் குமுதமும்
          பாங்குற நிரைத்த பயிற்சித் தாகிப்
 
        85-88; பரூஉப்பணை.......பயிற்சித்தாகி
 
(பொழிப்புரை)  மிகப் பருத்த பளிங்காலே பட்டங்கள்அமைத்து வேல் வடிவமைக்கப்பட்டுப் பொலிந்த ஒன்றனோடு ஒன்று மாறுபட்ட பக்கங்களை அமைத்து தண்டும் சலாகையும் குமுத மொட்டுக்களும் அப் பக்கங்களிலே வரிசையாக நட்டுவைத்த தொழிலை யுடையதாய் என்க.
 
(விளக்கம்) 85. பரூஉ- பருத்து. ,பணை-பருமை. மிகப் பருத்த என்க, பட்டிகை-பட்டம்; விளிம்பிற் கட்டும் பட்டம் என்க.
    87. காம்பு-தண்டு; தடி. கதிர்-சலாகை. குவிந்த குமுத மொட்டுவடிவமாக மணிகளிழைத்த நுனியையுடய தண்டுகள் என்க. இவையெல்லாம் மதில் உச்சியில் நடப்படுவன என்க.
    88. பயிற்சித்து - வேலைப்பாட்டினையுடையது.