உரை
 
2. இலாவாண காண்டம்
 
6. தெய்வச் சிறப்பு
 
         தருமான் ஆசனத் திருநடு இலங்க
         இருந்த வேந்தைப் பொருந்து மருங்குல்
         தலைவாய் உற்றுத் தலைஎழில் பொழிந்து
    120   சிலைகவிழ்த் தன்ன கிம்புரி கவ்வி
         நிழல்காட் டாடி நிழன்மணி அடுத்துக்
         கோலங் குயின்ற நீலச் சார்வயல் 
 
        117 - 122 ; தருமானாசன......சார்வுஅயல்
 
(பொழிப்புரை)  கம்மியரானே இயற்றித் தரப்பட்ட அரியணை யினது அழகிய நடுவிடம் பொலிவுறும்படி எழுந்தருளியிருந்த இறைவனைப் பொருந்துகின்ற பக்கத்தே பொருந்திப் பேரழகானே விளங்கிவில்லை வளைத்துவைத்தாற் போன்ற கிம்புரியாற் கவ்வப் பட்டு நிழல் காட்டாநின்ற கண்ணாடியினையும் ஒளிமணிகளையும் பதித்து ஒப்பனை செய்யப்பட்ட நீலநிறமுடைய சார்மணையின் அயலிலே என்க,
 
(விளக்கம்) 117. தரும் மாண் ஆசனம் என்றும் பாடம். இதற்கு சிற்பியராற் றரப்பட்ட மாட்சிமையுடைய இருக்கை என்க. மானாசனம் என்றும் பாடம். இதற்கு அரியணை என்க.
    118, வேந்தை - இறைவனை ; (கடவுளை).
    119, தலைஎழில்- உயர்ந்த அழகு.
    120. சிலை - வில். கவிழ்த்தன்ன-வளைத்துவைத்தாற் போன்ற,கிம்புரி-பூண்.கவ்வி- கவ்வப்பட்டென்க.
    121. ஆடி-கண்ணாடி. ஆடியையும் மணியையும் பதித்து என்க.
    122. கோலங்குயின்ற-ஒப்பனை செய்யப்பட்ட சார்வு-சார்மணை.