உரை
 
2. இலாவாண காண்டம்
 
6. தெய்வச் சிறப்பு
 
         வாடாத் தாரினர் சேடார் கச்சையர்
         வட்டுடைப் பொலிந்த கட்டுடை அல்குலர்
    125   மலர்ந்தேந் தகலத் திலங்குமணி ஆரத்
         துடன்கிடக் திமைக்கும் ஒருகாழ் முத்தினர்
         முழவுறழ் மொய்ம்பினர் முடியணி சென்னியர்
         கழுமணிக் கடிப்பினர் கடகக் கையினர்
         புடைதிரண் டமைந்த பொங்குசின நாகம்
    130   இடைநிரைத் தன்ன எழில்வளை கவ்விய
         எழுவுறழ் திணிதோள் எடுத்தனர் ஏந்திப்
         புடையிரு பக்கமும் போதிகை பொருந்தி
 
        123-132; வாடாத்தாரினார்........... போதிகை பொருந்தி
 
(பொழிப்புரை)  வாடாத மாலையினையுடையோரும், அழகு பொருந்திய கச்சையினையுடையோரும், வட்டுடையாகப் பொலியா நின்ற கட்டுடையினையுடையோரும், விரிந்துயர்ந்த மார்பின்கண் விளங்காநின்ற மணியாரத்தோடே கிடந்து ஒளிர்கின்ற ஒற்றை முத்துவட்முடையோரும், மத்தளத்தை ஒத்த தோளையுடை யோரும், முடியணிகலன் அணிந்த தலையினை யுடையோரும்,மணிக்கடிப்பினையுடையோரும், கடகமணிந்த கையினையுடையோரும் பக்கங்கள் திரண்டமைந்தனவும் மிக்க சினத்தையுடைய அரவங்கள் இடையே நிரல்படச் சுற்றினாற் போன்று அழகிய வளையங்களாற் கவ்வப்பட்டனவும் தூண்போன்றனவுமாகிய திணிந்த தம் தோள்களை  உயர்த்துப் பக்கங்களிலே இருபாலும் அமைந்த போதிகைகளை ஏந்தி நிற்போருமாய்ப் பொருந்தா நிற்பவும் என்க.
 
(விளக்கம்) 123. தேவர் ஆகலின் வாடாத்தாரினர் என்றார். சேடு-அழகு, பெருமையுமாம், கச்சை -ஒருவகை ஆடை,
    124. வட்டுடையும் பொலிந்த கட்டுடையும் உடைய அல் குலருமாய் எனினுமாம். வட்டுடை-முழந்தாளளவிற் கட்டுவதோர் ஆடை. கட்டுடை - கொய்சகமுதலிய வைத்து அழகுபடக் கட்டும் உடை என்க, அல்குல்-இடை.
    125. அகலம் - மார்பு. மணியாரம் - மணிமாலை.
    126.  இமைக்கும்-சுடரும். ஒருகாழ்முத்து - ஒற்றைமுத்து வடம்.
    127. முழவுறழ்-மத்தளத்தை ஒத்த, மொய்ம்பு-தோள்.சென்னி -தலை.
    128. கழுமணி-கழுவிய மணி ; அராவப்பட்ட மணி. கடிப்பு -ஒரு வகை அணிகலன். கடகம்-ஓரணிகலன்.
    129. புடை-பக்கம். நாகம்-பாம்பு. இது தோள் வலயத்திற்கு உவமை
    130 கையினியிடையே நிரல்படச் சுற்றிக்கொண்டாற் போல என்க.
    131, எழு-தூண்-உழலை மரமுமாம்.
    132. பொருந்தி- பொருந்த என்க.