உரை
 
2. இலாவாண காண்டம்
 
6. தெய்வச் சிறப்பு
 
          திருமுடி இந்திரர் இருநிலக் கிழவர்
          உரிமை மகளிரொ டுருபுபடப் புனைந்த
          பொத்தகக் கைவினைச் சித்திரச் செய்கைத்
    150    தத்தந் தானத் தத்தக நிறீஇ
 
        147 - 150 ; திருமுடி..........நிறீஇ
 
(பொழிப்புரை)  அழகிய முடிக்கலன் அணிந்த இந்திரருடைய ஓவியங்களும் பெரிய நிலத்தைக் காத்தருளிய பேரரசர் ஓவியங்களும் இவருடைய கோப்பெருந்தேவியருடைய ஓவியங்களுமாக வடிவமுண்டாக வரையப்பட்ட நூன்முறையானே இயற்றப்பட்ட சித்திரப்படங்களை அவ்வவற்றிற்குத் தகுந்த இடங் களிலே அழகுதக்கிருப்ப நிறுத்தி என்க,
 
(விளக்கம்) 147. இந்திரரும் பலராகலின் பன்மை கூறினார். இருநிலக்கிழவர் என்றது, இக்குவாகு குலம் ,, அரிகுலம், குருகுலம், நாதகுலம், உக்கிரகுலம் ( இவை அருக சமயத்தினர் கூறுவன)என்னும் ஐம்பெருங் குலத்தும் பிறந்து சிறந்த முடி மன்னர் உருவந்தீட்டிய ஓவியங்களை. உரிமை மகளிர் என்றது, இந்திரரும் இருநிலக் கிழவருமாகிய இவருடைய கோப்பெருந் தேவியர் உருவங்களை.
    148. உருபு-வடிவம்.
    149, பொத்தகம் - ஓவியநூல். சித்திரச் செய்கை என்றது உருவப்படங்களை.
    150. அத்தக -அழகுண்டாக.