உரை
 
2. இலாவாண காண்டம்
 
6. தெய்வச் சிறப்பு
 
          உரிமைச் சுற்றமொ டொருங்குடன் துன்றிக்
          கதிவிளக் குறூஉங் கருத்தினன் போல
          விதியிற் சேர்ந்து துதியிற் றுதித்துப்
    165    பெறற்கரும் பேதையைப் பெறுகெனப் பரவிச்
          சிறப்பெதிர் கொள்கைச் சித்திக் கிழவன்
          பேரறம் பேணிய சீர்நெறிச் சிறப்பின்
          தெய்வதை அமர்ந்தெனக் கைம்முதல் கூப்பி
          விரவுமலர்ப் போதொடு வேண்டுவ வீசிப்
    170    பரவுக்கடன் கழித்தனன் பைந்தா ரோனென்.
 
                ( உதயணன் இறைவழிபாடு செய்தல்)
            162 - 170 ; உரிமை,...........பைந்தாரோன் என
 
(பொழிப்புரை)  வாசவதத்தை முதலிய சுற்றத்தாரோடு புகுந்து செல்கதி விளக்கமுற்ற கருத்தையுடையோன் போன்று நூன்முறைப்படி இறைவன் திருமுன் சென்று வாழ்த்துப்பாடல்களைப்  பாடி வாழ்த்தி '' இறைவனே! எளியேன் பிறவிப்பெருங்கடனீந்தி முத்திநிலையை எய்துவேனாகத் திருவருள்புரிக''என்று வேண்டி, அருகனறத்தைப் பேணிய சிறந்த சமயச் சிறப் பினையுடைய தேவர்கள் இறைவனை விரும்பிக் கைகு வித்து வணங்குவது போலக் கைகூப்பி வணங்கிப் பூப்பலி முதலிய பலிகளைக் கொடுத்துத் தெய்வம் . பராவுதலாகிய கடனைக் கழித்தனன் என்க,
 
(விளக்கம்) 162. கதி-வீடு.
    163. விதி-நூல்விதி, துதி-வாழ்த்துப்பாடல்.
    165.பெறற்கரும்பேதை -கேவலமடந்தை; (முத்தி.) பெறு கென- பெறுவேனாக என்று.
    166 - 8, பி,றசமயத்தார்க் கில்லாச் சிறப்புக் கொள்கை யாகியஅருக சமயங்கூறும் சிறப்புமுறையான தேவர்கள் விரும்பிக் கைகுவித்து வணங்குமாறு போலக் கைகுவித்து வணங்கி என்க
    169 மலர்ப்போது-; இருபெயரொட்டு. பூப்பலி முதலிய பலிகளைக் கொடுத்து என்க.
    170, பைந்தாரோன், 39. தன்னியலாதலின் (161) அராந்தாணம் துன்றித் துதித்துப் பெறுகெனப் பரவிக் கூப்பி வீசிக் கடன் கழித்தனன் என இயைபு காண்க.