உரை
 
2. இலாவாண காண்டம்
 
7. நகர்வலங் கொண்டது
 
          பரவுக்கடன் கழிந்து விரவுப்பகை தணிந்த
          தாமந் துயல்வருங் காமர் கைவினைக்
          கோயின் முற்றத்து வாயில் போந்து
 
        (1-16; உதயணகுமரன் நகர்வலஞ் செய்யத் தொடங்குதல்)
          1 - 3 ; பரவுக்கடன்,,.....போந்த
 
(பொழிப்புரை) இவ்வாறு உதயணகுமரன். கடவுட் பராவுங் கடன் கழித்தபின்னர், தன்   உயிரோடு கலந்த காமவெகுளி மயக்கங்களாகிய பகைப்  பண்புகள் தணிதற்குக் காரணமானதும், மலர்மாலை அசையாநின்ற அழகிய ஒப்பனையை உடையதும் ஆகிய அத்திருக்கோயிலின் முற்றமாகிய வாயிலிடத்தே வாரர் நிற்ப, என்க.    
 
(விளக்கம்) 1.விரவுப்பகை-விரவுதலையுடைய பகைப்பண்புகள் என்க, அவை காமவெகுளி மயக்கங்கள், இனி உயிர்ப்பண்புகளைக் கொல்லுவனவாகிய ஞானாவரணீயம், தரிசனாவரணீயம், மோகனீயம், வேதனீயம் என்னும் காதிவினைகள் எனினுமாம். விரவுப் பகை தணிந்தமைக்குக் காரணமான கோயில், தாமந் துயல் வருங் கோயில் எனத் தனித்தனி கூட்டுக.
    2. தாமந் துயல்வரும்-மாலைகள் அசையாநின்ற காமர் கை  வினை- ஒப்பனைத் தொழில்.   
    3. கோயில் - அராஅந்தாணம். முற்றத்துவாயில்- முற்றமாகிய வாயில் என்க, அத்துச் சாரியை அல்வழிக்கண் வந்தது. போந்து என்னும் செய்தெனெச்சத்தைச் செயவெனெச்சமாக்குக.