உரை
 
2. இலாவாண காண்டம்
 
7. நகர்வலங் கொண்டது
 
           மணிஅறைந் தன்ன மாவீழ் ஓதி
           அணிபெறக் கிடந்த அம்பொற் சூட்டினர்
           சூடுறு பொன்வினைச் சுவணர் புனைந்த
     20    தோடுங் கடிப்புந் துளங்கு காதினர்
 
            17-20; மணி......விரைந்து
 
(பொழிப்புரை) நீலமணியை இழையாக்கிப் பதித்து வைத்தாற் போன்ற வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலினையும் அக்கூந்தல் அழகு பெறும்படி அதனயலே கிடந்த அழகிய பொற்பட்டத்தினையும் உடையரும், சுவணமென்னும் பொன்னாலியற்றிய அணிகலன்களை யுடையோரும் தோடுங் கடிப்பும் அசையா நின்ற செவியினை யுடையோரும் என்க,
 
(விளக்கம்) 17. மணி - நீலமணி. அறைந்தன்ன-பதித்து வைத்தாற் போன்ற. நீலமணியை இழையாக்கி அறைந்து வைத்தாற் போன்ற என்றவாறு. மா-வண்டு. ஓதி-கூந்தல்.
    18. அக்கூந்தல் அழகுறும்படிஎன்க. பொற்சூட்டு-நெற்றிப்படடம்.
    19. சுடுதலுற்ற பொற்றொழிலாற் செய்த சுவணப்பொன் அணிகலன்களை யுடையோரும் என்க.
    20. தோடு, கடிப்பு என்பன செவியணிகலன்கள்.