உரை
 
2. இலாவாண காண்டம்
 
7. நகர்வலங் கொண்டது
 
           வெம்மை பொதிந்த பொம்மென்இளமுலை
           இடைப்படீஇப் பிறழும் ஏக வல்லி
           அணிக்கலை புனைந்த அரசிலைப் பொன்அடர்
           புனற்சுழி புரையும் பொலிவிற் றாகி
           வனப்பமை அவ்வயிற் றணித்தகக் கிடந்த
           உந்தி யுள்ளுற வந்துடல் நடுங்கி
           அளைக்கிவர் அரவின் தளர்ச்சி ஏய்ப்ப
           முளைத்தெழு முலைக்கச் சசைத்தலின் அசைந்த
           மருங்குல் நோவ விரும்புபு விரைந்து
     30    மைவரை மீமிசை மகளிர் போலச்
           செய்வளை மகளிர் செய்குன் றேறினர்
 
            21- 31 ; வெம்மை......ஏறினர் 
 
(பொழிப்புரை) (31)வளையலையுடையோரும் ஆகிய மகளிர் தமது இளமுலையினிடையே பட்டுப் பிறழாநின்ற ஏகவல்லி என்னும் அணிகலன், அழகிய அரசிலை வடிவிற் செய்த பொற்றகட்டினை யுடைத்தாய் நீர்ச்சுழி போன்ற அழகினையுடைத்தாய் இயற்கையிலேயே பேரழகு படைத்த வயிற்றின்கண் அவ்வழகிற்கு மேலும் அழகு தருவதாய்க் கிடந்த கொப்பூழின்கண்வந்து அச்சத்தாலே உடல் நடுங்கி வளையினுட் புகுதற்கு முயலும் பாம்பின் தளர்ச்சி போலத் தளரா நிற்ப முளைத்தெழுந்த முலையும் அதன்கண் அணிந்த கச்சு முதலியனவும் பாரமாகி முன்னரே வருத்துதலானே வருந்தா நின்ற தம்மிடைகள்மேலும் வருந்தும் படி, உயர நின்று காண்டலை விரும்பி மலையின்மேல் ஏறாநின்ற வரையரமகளிர் போலச் செய்குன்றுகளிலே விரைந்து ஏறாநின்றனர் என்க.
 
(விளக்கம்) ஓதி முதலியவற்றையுடைய  (31) மகளிர் விரும்பி மலையின்மேல் ஏறும் வரையர மகளிர் போல் விரைந்து செய்குன்றுகள் மிசை ஏறாநின்றனர் என்க.  
    21. வெம்மை-விருப்பம்.
    22. இடைப்படீஇ-இடையிற்பட்டு. ஏகவல்லி-ஒரணிகலன் ;   ஒற்றை வடம்.
    23. அணிக்கலை-அழகிய ஆடை, அணிகலனாகிய மேகலையுமாம். அரசிலைப் பொன்னடர் - அரசிலைவடி விற்றாய்ச் செய்ததொரு பொற்றகடு,
    24, புனற் சுழி-நீரிலுண்டாகும் சுழி. இது  கொப்பூழுக்குவமை
    25. அணித்தகக் கிடந்த - அழகிற்கு எற்பக் கிடந்த,
    26. உந்தி - கொப்பூழ்.
    27. அளை -வளை, இவரரவு-ஊர்கின்ற பாம்பு. இஃது ஏகவல்லிக்கு உவமை, வளை கொப்பூழுக்குவமை.
    28. முலையுங் கச்சும் அசைத்தலின் என்க,
    29. மருங்குல்-இடை. விரும்புபு - விரும்பி.
    30 மைவரை மீமிசை மகளிர் - வரையரமகளிர்.
    31. செய்வளை; வினைத்தொகை. செய்குன்று - செயற்கை .மலை.