உரை
 
2. இலாவாண காண்டம்
 
7. நகர்வலங் கொண்டது
 
            உணர்ந்தோர் கொண்ட உறுநன் றேய்ப்ப
           வணர்ந்தேந்து வளர்பிறை வண்ணங் கடுப்பத்
           திருநுதற் கேற்ற பரிசரக் கைவினை
     35    நீடிய பின்றைக் கூடாது தாங்கும்
           கொற்றவற் காண்மென வெற்றவேற் றடக்கையர்
           கோல வித்தகங் குயின்ற நுட்பத்துத்
           தோடுங் கடிப்புந் துயல்வருங் காதினர்
 
                (32-47. ஒரு தொடர்.)
           32 - 38 ; உணர்ந்தோர்...,...விலக்கவும்
 
(பொழிப்புரை) (வேறு சிலமகளிர் அறிவுடையோர் தம் மனந்துட் கொண்ட மிக்க நன்றியறிவு போன்று நாளுக்குநாள் வளராநின்ற வளர்பிறையின் மேல் வண்ணந்தீட்டினாற் போலத் தமது அழகிய நெற்றிக்கேற்ற ஒப்பனைத் தொழில் செய்தலினாலே காலம் நீடுமாயின் அங்ஙனம் நீடிய பின்னர்க் கொற்றவனைக் காண்டல் இயலாதாம்; ஆதலின் (இத்தொழில் குறை கிடப்பிற் கிடக்க) யாம் இன்னே சென்று காண்பேம் என்று கருதி, வெற்றிவேல் ஏந்திய கையினையுடையோரும் ஒப்பனைச் சிறப்புப் பொருந்திய நுண்மையுடைய தோடும் கடிப்பும் அசையா நின்ற செவியினையும் தூய பிற அணிகலன்களையும் உடைய காவன் மகளிர் தம்மை வழிகள் தோறும் விலக்கா நிற்பவும் தவிராராய் என்க,
 
(விளக்கம்) 32-33. உணர்ந்தோர்-நன்மை தீமைகளை ஆராயந்தறிந்த சான்றோர்.    
    34. நன்றி போல வளரும் பிறை என்க, பிறைக்கு வண்ணமூட்டுதல் போன்று திரு நுதலுக்குச்செய்யும் பரிசரக்கை வினையினால்காலம் நீடியபின் என்க, பரிசரக்கைவினை - ஒப்பனைத் தொழில்.
    35. கூடாது -(கொற்றவனைக்) காண்டல் இயலாது.
    36. கொற்றவன் ; உதயணகுமரன் ''காண்ம்'' என்புழி, ஈற்றயலகரமும் ககரப் புள்ளியும் கெட்டன; செய்யுள் விகாரம், காண்கம் என்றவாறு. வெற்றம்-வெற்றி.
    37. ஒப்பனைத் தொழிற்றிற மியன்ற நுட்பத்தினையுடைய தோடுங் கடிப்பும் என்க. தடக்கையரும் காதினருமாகிய வாலிழையையுடைய காவல் மகளிர் விலக்கவும் (தவிராராய்) என்க, இதனால் மகளிரை விலக்குதற்குப் பெண்ணினக் காவலர் உண்மை உணர்க,