உரை
 
2. இலாவாண காண்டம்
 
7. நகர்வலங் கொண்டது
 
         
     55    கன்னியர் எல்லாங் காமன் துரந்த
           கணையுளங் கழியக் கவினழி வெய்தி
           இறைவளை நில்லார் நிறைவரை நெகிழ
           நாண்மீ தூர்ந்து நன்னெஞ்சு நடப்பத்
           தோண்மீ தூர்ந்து தொலைவிட நோக்கி
     60    அற்றம் பார்க்குஞ் செற்றச் செய்தொழிற்
           பற்றா மாந்தரிற் பசலை பாய்ந்த
 
        55-61; காமன்...,...வருந்தின ரதனால்
 
(பொழிப்புரை) காமன் எய்த மலர்க்கணைகள் தம் நெஞ்சத்தைத் துளைத்துக் கழியா நிற்றலானே அழகு கெட்டுத் தம் கைவளை கழன்று வீழவும் நிறை என்னும் வரம்பு நெகிழவும் நாணத்தைக் கீழ்ப்படுத்தி நன்றாகிய தம் நெஞ்சம் செல்லா நிற்பவும் தமது தோள்வலி மிக்கதென்று கருதி தோற்குமிட மறிந்து செவ்வி பார்க்கும் உதயணனுடைய போர்த்தொழிலை யுடைய பகைவேந்தர்போல முன்னரே பசலைபாயப்பட்ட தம் கரிய கண்கள் புலம்பா நிற்பப் பெரிதும் வருத்தமெய்தினர் ஆதலானே என்க.
 
(விளக்கம்) 55.. துரந்த-செலுத்திய,
    56.கணை -ஈண்டு மலரம்பு; அவை - தாமரை, சூதம், அசோகு, முல்லை, நீலம் என்பன.
    57. வளை இறைநில்லார் என மாறுக. இறை- முன்கை.உடைமையின் தொழில் உடையார் மேனின்றது.
    58. நாணத்தினும் மேம்பட்டு நெஞ்சு நடப்ப என்க
    59-62. தோள்வலி மிக்கதாகக் கருதிப் பகைவன் தோற்குமிட முணர்ந்து காலத்தை ஆராயா நின்ற போர்த்தொழிலையுடைய பகையரசர் போல என்க, ஈண்டுப் பகையரசர் உதயணனுடைய பகைமன்னர் என்க. பற்றாமாந்தர்போல வருந்தினர் என இயைக்க.