உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
7. நகர்வலங் கொண்டது |
|
95 சுவல்பொதி
கூழையர் சுடர்பொன்
தோட்டினர் பெயலிடைப்
பிறழு மின்னேர்
சாயலர் பாப்பெயிற்
றன்ன பன்னிரைத்
தாலி கோப்புமுறை
கொண்ட கோலக்
கழுத்தினர் மணிநில
மருங்கின் முனிவிலர் ஆடும் 100
பந்துங் கழங்கும் பட்டுழிக்
கிடப்ப
அந்தண் மஞ்ஞை ஆடிடம்
ஏய்ப்பக்
கோதையுங் குழலுந் துள்ளுபு விரியப்
பேதை மகளிர் வீதி
முன்னினர்
வெண்முகில் நடுவண் மீன்முகத் தெழுதரும்
|
|
95- 104;
சுவல்பொதி......முன்னினர்
|
|
(பொழிப்புரை) இனிப்
பிடரை மறைக்கும் கூந்தலினையும்,பொன் தோட்டினையும், மின்னலை ஒத்த
அழகினையும் சாயலினையும், கழுத்தினையும். உடைய பேதைப்பருவத்து மகளிர்
மணிநிலத்தின் மேலே தாம் எப்பொழுதும் வெறாதே ஆடுகின்ற பந்தும்
கழங்கும் ஆடியவிடத்தே கிடக்கவிட்டு வீதி மயில்கள் ஆடும்
இடம்போல, தோன்றும்படி தமது கோதையும் கூந்தலும் துள்ளி விரியும்படி
ஆடிவந்து எய்தாநின்றனர் என்க.
|
|
(விளக்கம்) பேதை மகளிர்
பந்தும் கழங்கும் களத்தே கிடப்ப மயில்போல ஆடிவந்து வீதியில் எய்தினர்
என்க, 95. சுவல் - பிடரி. கூழை-கூந்தல்.
தோட்டினர்-தோடணிந்தவர். 96. பெயலிடைப் பிறழும் மின்
ஏர் சாயலர்-முகிலினூடே தவழாநின்ற மின்னலை ஒத்த அழகும் சாயலும் உடையர்.
சாயல் மென்மை. 97. பாப்பெயிறு - பாம்பின்பல். பாம்பின்
பல்போன்று பொன்னாற் செய்த பற்களை நிரலாகக் கோத்தமுறைமையினையுடைய
பன்னிரைத்தாலி என்னும் அணிகலனால் ஒப்பனை
செய்யப்பட்ட கழுத்தினையுடைய மகளிர் என்க. 99,
மணிநிலம்-மணிகள் பதிக்கப்பட்.ட பந்தாடுகளம். முனிவிலர்
-வெறுப்பிலராய். 100, கழங்கு-கழற்காய். பட்டுழி-கிடந்த விடத்தே. 101.
அந்தண் மஞ்ஞை-அழகிய குளிர்ப்புடைய மயில். வீதி மஞ்ஞை ஆடிடம்
போலத்தோன்றும்படி ஆடி வந்து எய்தினர் என்க. பேதை
-மகளிரின் ஏழுவகைப் பருவத்தொன்று. அஃதாவது - காமஞ்சாலா இளமைப்
பருவம்.
|