உரை
 
2. இலாவாண காண்டம்
 
7. நகர்வலங் கொண்டது
 
           அறம்புரி செங்கோல் அவந்தியர் பெருமகன்
           மறம்புரி தானை மறமாச் சேனன்
           பாவைய ருள்ளும் ஓவா வாழ்க்கை
     120    ஏசுவ தில்லா வாசவ தத்தையும்
           காமன் அன்ன கண்வாங் குருவின்
           தாமந் தாழ்ந்த ஏம வெண்குடை
           வத்தவர் இறைவனு முற்பான் முயன்ற
           அத்தவம் அறியின் எத்திறத் தாயினும்
     125    நோற்றும் என்னும் கூற்றினர் ஆகி
           மணிநிற மஞ்ஞையுஞ் சிங்கமு மயங்கி
           அணிமலை இருந்த தோற்றம் போல
           மகளிரு மைந்தரந் தொகைகொண் டீண்டி
           மாடந் தோறு மலர்மழை பொழிய
 
            117 - 129 ; அறம்புரி.,,....,பொழிய
 
(பொழிப்புரை) அவந்தி நாட்டினர் மன்னனாகிய பிரச்சோதனன் புதல்வியருள்ளும் தலைசிறந்தவளாகிய ஒழிவில்லாத வாழ்க்கையின்கட் பழிபடாத வாசவதத்தையும் காண்போர் கண்ணைக் கவரும் காமவேளை ஒத்த அழகினையும், மாலைதாழும்  கொற்ற வெண்குடையினையும் உடைய உதயணனும் இத்தகைய இன்பவாழ்க்கையினை எய்தும் பொருட்டு முற்பிறப்பிலே செய்த அத்தவம் எத்தகையது என அறிவேமாயின் எத்திறத்தேனும். அத்தவத்தினை யாமும் இயற்றுவேம் என்று கூறும் கூற்றினை யுடையராய் மகளிரும் ஆடவரும் மேனிலை மாடங்கள் தோறும் மலையின்மேல் மயிலும் அரிமாவும் திரண்டு கலந்து இருந்த. காட்சிபோலக் குழாங்கொண்டு நெருங்கி மகிழ்ச்சியாலே மலர் மாரி பொழியா நின்றனர் என்க.
 
(விளக்கம்) 117. அறத்தையயே செய்யும் செங்கோன்மையையும் வீரச்செயலையே விரும்பும் படையினையும் உடைய அவந்தியர் மன்னனாகிய மறமாச்சேனன்-என்க, மறமாச்சேனன் - பிரச்சோதனன்.
    119. பாவையர் என்றது புதல்வியர் என்னும் பொருட்டு.
    120.ஓவா - ஒழியாத. வாழ்க்கையின்கண் ஏசுவது இல்லா என்க. ஏசுவது, பழிச்செயல்.
    121 காண்போர் கண்ணைக் கவரும் அழகென்க.
    122. தாமம்-மாலை. ஏமம்-பாதுகாவல்.
    123. வத்தவர் இறைவன் - உதயணகுமரன். முற்பால் - முற்பிறப்பு.  
    124.எத்திறத்தாயினும் -அத்தவம் எப்படிப்பட்டதாயினும் என்க. எவ்வாற்றாலேனும் எனினுமாம்.
    125,நோற்றும் - தன்மைப் பன்மை வினைமுற்று. கூற்றினர் சொல்லையுடையோராய்.
    126. மணி-நீலமணி. மயங்கி-கலந்து,
    127. அணிமலை - அழகிய மலை, -
    128. தொகை - திரள்க் ஈண்டி - நெருங்கி,
    129, மலரை மழைபோன்று சிதறாநிற்ப என்க.