|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 7. நகர்வலங் கொண்டது | | 140 அருந்தவங்
கொடுக்குஞ் சுருங்காச்
செல்வத் துத்தர
குருவம் ஒத்த
சும்மை முத்துமணல்
வீதி முற்றுவலம் போகித்
தெய்வ மாடமுந் தேர்நிலைக்
கொட்டிலும் ஐயர்
தானமும் அன்னவை
பிறவும் 145 புண்ணியப்
பெயரிடங் கண்ணின் நோக்கி
நாட்டகம் புகழ்ந்த நன்னகர்
புகல மீட்டகம்
புக்கு மேவரு செல்வமொடு
| | (உதயணன் செயல்) |
140- 147 ; அருந்தவம்........மீட்டகம் புக்கு
| | (பொழிப்புரை) செயற்கரிய
தவந்தருகின்ற சுருங்காத இன்ப நுகர்ச்சினை யுடைய மேனிலையுலகத்தை ஒத்த
ஆரவாரமுடையதும், ஏனை நாட்டு மக்களாலே புகழப்பட்டதுமாகிய சயந்தி
நகரத்தினது முத்தையே மணலாகப் பரப்பப்பட்ட வீதிமுழுதும் வலமாகச் சென்று
தெய்வத் தன்மையுடைய மாடமாளிகைகளையும், தேர்கள் நிற்கும்
கொட்டில்களையும், சான்றோர் இருக்கைகளையும், அவை போல்வன பிற அற
நிலையங்கனையும்,கண்ணாலே பார்த்து அந் நகரமாந்தர் தம்மை
விரும்பாநிற்ப மீண்டு அரண்மனையிலே புகுந்து என்க.
| | (விளக்கம்) 140,
இவ்வுலகத்தே செய்யும் அறப்பயன்களை அம்மேனிலை யுலகத்தே நுகர்தலின்
அருந்தவம் கொடுக்கும் சுருங்காச் செல்வத்து உத்தரகுருவம்
என்றார்.''ஈண்டுச் செய்வினைஆண்டு நுகர்ந்திருத்தல்
அல்லது............இல்லா நன்னாட்டு இறைவன்'' என்றார் மணிமேகலையினும்.
உத்தரகுருவம் - வானிலை உலகம்; போகபூமி. அஃது அறுவகைப்படும்;
என்னை ? ''ஆதியரி வஞ்சம் நல்லரி வஞ்சம் ஏமத வஞ்சம் இரணவஞ்சம்
தேவகுருவமெனப் போகபூமி அறுவகைப்படுமே'' (திவா) என்றாராகலின்,
(சிலப், 2-10, அடியார்க். உரை மேற்கொள்.)
143. தெய்வமாடம்-தேவர் கோட்டம். 144. ஐயர்-அறவோர்; தலைவர், ஐயர்
தானம்-துறவியரிடம்; அறவோர் மன்றம் முதலியன என்க. 145. புண்ணியப்
பெயரையுடைய இடங்கள் என்க. அவை அருகன் கோயில் அந்தணர் உறையுள்
அறவோர் மன்றம் என்பன போல்வன. அவையிற்றைக் காண்டலும் புண்ணியம்
ஆகலின் கண்ணின் நோக்கி என்று விதந்தார். 146. நாட்டகம் -
நாட்டிலுள்ள ஏனை நகரத்தார் எல்லாம் என்க. நன்னகர் - சயந்தி; ஆகுபெயர்.
புகல - விரும்ப. அகம்-ஈண்டுஅரண்மனை.
|
|