உரை
 
2. இலாவாண காண்டம்
 
7. நகர்வலங் கொண்டது
 
         
     165    புதுமைக் காரிகை புதுநாண் திளைப்பக்
           கதிர்விளங் காரத்துக் காமங் கழுமி
           அன்னத் தன்ன அன்புகொள் காதலொடு
           பொன்னகர்க் கியன்ற புகரில் புகழ்நகர்
           வரைவில் வண்மை வத்தவர் மன்னற்குப்
     170    பொருவில் போகம் புணர்ந்தன்றால் இனிதெள்,
 
           165-170; புதுமைக் காரிகை.......இனிதென்
 
(பொழிப்புரை) தனது புத்தழகானே புதிய நாணமேற்கொள்ள, ஒளிதிகழும் மெய்யிடத்தே காமத்தினது மெய்ப்பாடு நிரம்பி அன்னத்தின் அன்புக்காதலை ஒத்த காதலோடே சயந்தி நகரத்தின்கண் உதயணகுரனுக்கு ஒப்பற்ற போகம் இனிதே பொருந்துவதாயிற்று.
 
(விளக்கம்) 165- புதுமைக் காரிகை-புத்தழகு. புதுநாண்-புதுவதாக மணப்பதனாலே உண்டாண நாணம் என்க.
    166. ஆகம்-உடல், மார்புமாம். கழுமி- நிறைந்து.
    167. காதலன்பின்கண் அன்னப்பறவை சிறப்புடையனவாதல் பற்றி அன்னத்தன்ன அன்புகொள் காதல் என்றார். 'ஆதரம் பெருகுகின்ற அன்பினால் அன்னம்  ஒத்தும்.'' என்றார் சீவக சிந்தாமணியினும்,(186)
    168. ஈவாரும் ஏற்பாரும் இல்லாமையாகிய குற்றம் வானுலகிற்கு உளதாக இச்சயந்தி நகரம் அக்குற்றமின்றி ஏனை நலங்களில் அவ்வானுலகை ஒக்கும் என்பார் ' பொன்னகர்க்கு இயன்ற புகரில் புகழ் நகர்' என்றார், புகர்-குற்றம். புகழ்- ஈதலால் உண்டானபுகழ்
    169. வரையாது வழங்கும் கொடை
    170. பொருவில் - ஒப்பற்ற. புணர்ந்தது- பொருந்திற்று

            7 . நகர்வலங்கொண்டது முற்றிற்று