|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 8. யூகி போதரவு | | சிறைகொளப்
பட்டுச் செல்வ
நீத்த குறைமகன்
என்பது கோடல்
செல்லாது திருமண
நெகிழ்ந்த அருண்மலி
அன்பொடு தந்தனன்
கோமான் என்றுதலை வணங்கி 35 ஒண்தார்
மார்பன் உதணன்
பணிமொழி மந்திர
மாக மகண்மாட்
டியைந்தவை அன்றவன்
உள்ளத் தகமுண
வராகன் உரைத்த
வண்ணமு மிகப்பல வாகத
| | 31 - 38 : சிறைகொள.......உரைத்தவண்ணமும்
| | (பொழிப்புரை) தன்னைப்பின்தொடர்ந்த வராகனை நோக்கி, ''நின் கோமான் என்னை
நம்மால் சிறைபிடிக்கப்பட்டுத் தன் அரசப்பேற்றினை இழந்த
சிறுமையுடையோன் என்று இகழாமல் நெஞ்சம் நெகிழ்ந்த
அருள்மிகுதற்குக் காரணாமான அன்புடனே இச்செல்வியை எனக்கு வழங்கினன்,''
என்றுகூறி அம்மன்னன் இருந்த திசை நோக்கி வணங்கி 'இம்மொழிகளை.
அப்பிரச்சோதன வேந்தனுக்குக் கூறுவாயாக,'' என்று பணித்த மொழிகளையும்,
மேலும் சூழ்ச்சியாக வாசவதத்தையின்பால் நிகழ்த்தப்பட்ட செயல்களையும்
அவ்வராகன் அன்றே அப்பிரச்சோதன மன்னன் நெஞ்சத்தைத்
தின்னும்படி அவனுக்குக் கூறியதனையும் என்க.
| | (விளக்கம்) 31. சிறைகொள என்பது
தொடங்கி (34) தந்தனன் கோமான் என்பது முடிய உதயணன் வராகனுக்கு
கூறியவை. உதயனன் வாசவதத்தையைக் கைப்பற்றிக்கொண்டு
புறப்பட்டபொழுது பிடியின் பின்தொடர்ந்துவந்த வராகனை நோக்கி உதயணன்
இங்ஙனம் கூறினான் என்பதனை உஞ்சைக் காண்டத்தில் 46 ஆம்
காதையில், ''அவந்தியர் பெருமகன் அடிமுதல் குறுகிப்
பயந்துதான் வளர்த்த பைந்தொடிப் பாவையைச் சிறையிவன் என்னுஞ்
சிந்தையி னீக்கிக் குறையுடை உள்ளமொடு கொள்கெனத்
தந்துதன் காதலின் விடுப்பப் போகுதல்
வலித்தெனன் வணக்கம் இன்றியான் செய்தனன்
தனக்கு'' எனவரும் உதயணன்
கூற்றாலுணர்க.
(1-46; 143-8) 32, குறைமகன் - சிறுமையுடையோன். கோடல் செல்லாது-
மனத்திற் கொள்ளாமல். 33. அன்பும் அருளும் உடைய மனம்
என்பான் திருமனம் என்றான். 34. ''அருள் என்னும் அன்பீன் குழவி''
என்பது பற்றி அருள்மலி அன்பொடு என்றார், அருள்மலிதற்குக் காரணமான
அன்புடனே என்க. அச்செய்ந்நன்றி தோன்றத் தலைவணங்கினான் என்பது
கருத்து. 35, ஒண்டார். மார்பன் உதயணன் என்னும் எழுவாய் (27)
முன்னரே கூட்டப்பட்டது. பணிமொழி ; வினைத்தொகை.
36. மந்திரமாக-மறைவாக; இரகசியமாக. மகள் ;
வாசவதத்தை. 37, அன்று-அது நிகழ்ந்த அற்றை நாளிலே.
அவன்-அப்பிரச்சோதன மன்னன். அகமுண-நெஞ்சத்தைத் தின்னும்படி; மிகவும்
வருந்தும்படி என்பது கருத்து.
|
|