உரை
 
2. இலாவாண காண்டம்
 
8. யூகி போதரவு
 
         
     80   கூற்ற வேழம் அடக்கிய குமரற்குக்
          காற்றும் எரியும் கலந்துகை கொடுப்ப
          மயக்கம் எய்தி மாணகர் மாந்தர்
          கயக்கம் இன்றிக் கடையிடை தெரியார்
          தம்முள் தாக்கிய விம்ம வெகுட்சியுள்
     85   பொருமுரண் அண்ணல் பூந்தார் அகலத்துத்
          திருமகள் தன்னில் தீரா தியைந்தனள்
          இன்னும் அவனே கல்நிரை கானகத்துக்
          காதலிற் காப்பத் தீதிலள் ஆகிப்
          புக்கனள் அவனொடு புனைபிடி ஊர்ந்தெனத்
     90   தொக்க மாந்தர் நற்பொருள் பொதிந்த
          வாய்ப்புள் கொண்ட வலிப்பினன் ஆகி
 
        80 - 91; கூற்ற வேழம்.....வலிப்பினனாகி
 
(பொழிப்புரை) இப் புறங்கூற்றினைக் கேட்டுக் குழுமிய நகரமாந்தர் 'கூற்றுவனை ஒத்த நளகிரியினை அடக்கிய உதயண குமரனுக்கு நம் மன்னன் கைகொடுத்ததோடன்றிக் காற்றும் நெருப்புங் கூடித் துணைபுரியாநிற்ப, அவ்வமயத்தில் நந்நகரமக்கள் மயங்கி இந்நிகழ்ச்சிக்கு முதலும் நடுவும் முடிவும் அறியமாட்டாதாராய்த் தம்முள் தாமே கலா அய்த்துக் கொண்ட விம்முதற்குக் காரணமான போரினூடே,போர் வலிமைமிக்க உதயணகுமரனுடைய மலர்மாலை அணிந்த மார்பின்கட் சென்று திருமகள் போன்று வாசவத்தை பொருந்தா நின்றனள். பின்னரும் அவ்வுதயண குமரனே காதலோடு தன்னைப் பாதுகாவா நிற்பத் தீங்கொன்றும் இலளாய் அவனோடு பிடியானையை ஊர்ந்து   சென்றனள்' என்று கூறாநின்ற நல்ல பொருள் பொதிந்த வாயச் சொல்லையும் கேட்ட வலிமையினையுடையனாய் என்க.
 
(விளக்கம்) 80, கூற்றவேழம்-கூற்றுவனை ஒத்த நளகிரி என்னும் களிற்றியானை.
   81. கைகொடுப்ப-துணைபுரிய,
   83, கடையிடை கயக்கமின்றித் தெரியார் என மாறுக, கயக்கம்-கலக்கம். கடையிடை என்றதனால் முதலும் நடுவும் கடையும் என விரிக்க.
   84. விம்மம்- விம்முதல். வெகுட்சி ;ஆகுபெயராய்க் காலம்  என்பதுபட நின்றது.
   85. அண்ணல் ; உதயணகுமரன்; உதயணகுமரன் மார்பில் முன்னரே பொருந்தியிருக்கும் திருமகளைப்போன்று என்க. வாசவதத்தை என்னும் எழுவாய் வருவித்தோதுக.
   86. கல்நிரை கானம்- மலைகள் நிரம்பிய காடு.கல் -பருக்கைக் கல்லுமாம்.
   89. பிடியூர்ந்து அவனோடு புக்கனள் எனமாறுக.
   90, மாந்தர் என்னும் எழுவாய் முன் கூட்டப்பட்டது.
   91, யூகி கருதிய காரியம் நிறைவுற்றமையும்,வாசவதத்தை உதயணனைப் பெரிதும். விரும்புகின்றாள் என்பதும். இவர் கூற்றாற் புலப்படுதலான் நற்பொருள் பொதிந்த வாய்ப்புகள் என்றார்.
   91. வாய்ப்புள் - வாய்ச்சொல். வலிப்பினன் - வலிமையுடையன். இவ்வாய்ப்புள் அவன் வலிமையை மிகுவித்தல் தோன்ற வலிப்பின்னாகி என்றார்.