உரை
 
2. இலாவாண காண்டம்
 
8. யூகி போதரவு
 
          வென்வேல் வேந்தனை விடுத்தனிர் சிறையென
          இன்னுரை அமிர்தம் இயைந்தவர்க் கீத்துத்
     115   தான்செயப் படுபொருள் ஆங்கவர்க் குணர்த்தி
          ஊன்சேர் கடுவேல் உதயணன்  நீங்கிய
          கான்சேர் பெருவழிக் கடத்தல் செல்லீர்
          நாடு மலையுங் காடும் பொருந்திக்
          கனிவளங் கவர்ந்து பதிவயிற் பெயரும்
     120   பனியிறை வாவற் படர்ச்சி ஏய்ப்பப்
          படையினுந் தொழிலினு நடைவே றியன்ற
          உருவினும் இயல்பினும் ஒருவிரும் பலரும்
          கலிகெழு பண்டங் களைகலம் போல
          வலிகெழு சிறப்பின் மதில்உஞ் சேனை
     125   உள்ளகம் வறுமை எய்திப் புல்லெனப்
          பெருந்தம் உள்வழி விரும்புபு செல்லும்
          பொருளும் போகமும் புகழும் போல
          மறுவில் மணிப்பூண் மன்னவன் உள்வழிக்
          குறுகுதல் குணனென உறுநரை ஒருப்படுத்
 
        113 - 129; வென்வேல்...,..உணர்த்தி
 
(பொழிப்புரை) அந் நண்பரைநோக்கி ''நண்பரீ! நீயிரெல்லாம் நன்கு முயன்று வெற்றிவேலையுடைய நம் வேந்தனைச் சிறைவீடு செய்தீர்'' என்று அமிழ்தம் போன்ற, இனிய முகமன் மொழிகூறிப் பின்னர்த் தான் செய்யக் கருதியுள்ள செயல்களையும் அவர்க்கு அறிவுறுத்தி ''இனி நீயிர் நம் உதயண வேந்தன் சென்ற காட்டகப் பெருவழிமேற் செல்லாமல், நாட்டினும் மலை களினும் காடுகளினும் புகுந்து ஆண்டுள்ள கனிச் செல்வங்களைக் கவர்ந்துண்டு மீண்டும் பலவழிகளானும் தம்மிருக்கை நோக்கி வருகின்ற பனிபடர்ந்த சிறகினையுடைய வௌவால்கள் போன்று படைக்கலங்களானும், தொழில்களானும், ஒழுக்கம் வேறுபட்ட வடிவத்தானும்,தண்மையானும், வேறு வேறாகித் தனித்தாதல் சிலரும் பலருமாய்ச் சேர்ந்தாதல் வலிமை பொருந்திய சிறப்பினையுடைய மதில் குழ்ந்த இவ்வுஞ்சை நகரம் கடலின்கட் பொருந்திய தும் பண்டங்களை இறக்கிவிட்டதுமான மரக்கலம் போல உள்ளிடம் வறிதாகிப் பொலிவிழக்கும்படி இதனினின்றும் புறப்பட்டுப்பெரிய தவம் உள்ள இடத்திற்குத் தாமே விரும்பி அதர்வினாய்ச் செல்லாநின்ற பொருளும், நுகர்ச்சியும், புகழும் போலக் குற்றமற்ற மணியணிகலன் அணிந்த நம் மன்னவன் இருக்குமிடத்திற்குச் செல்லுதல் நன்றாகும்'' என்று கூறி உடம்படச் செய்து அந்நண்பரை அவ்வாறே போக்கிய பிண்னர் என்க.
 
(விளக்கம்) 113. வென்வேல் - வெற்றியையுடைய வேல். வேந்தன் ; உதயணன்.சிறை விடுத்தனிர் என மாறுக.
   114. ஈத்து - ஈந்து.
   115.  தான் இனிச் செய்யக் கருதியுள்ன செயலை என்க,
   116.  பகைவர் ஊன் சேர்ந்துள்ள கடிய வேலையுடைய என்க,
   117,  கடத்தல் செல்லீர் ; ஒருசொல் ; கடவாதீர்.
   120,  பனியிறை - பனிபடிந்த சிறகு.இரவிற் பறப்பன ஆதலின் பனியிறை வாவல் என்றார் வாவல் -வௌவால்,படர்ச்சி - செலவு. ஏய்ப்ப; உவமவுருபு.
   121.  கலி-கடல், களைகலம்;வினைத்தொகை. கலம் - மரக்கலம்.
   128 மன்னவன் ; உதயணகுமரன்.
   129. குணம்-குணம், ஈண்டு நன்மைப்பண்பு குறித்து நின்றது. ஒருப்படுத்து - உடம்படச் செய்து.இப்பகுதியில் வாவல், மறவர்க்கும்,பண்டம்களைகலம், உச்சயினி நகரத்திற்கும்,பெருந்தவமுள்ள இடம் உதயணனிருக்குமிடத்திற்கும்,பொருள் முதலிய மூன்றும் மறவர்க்கும் உவமைகள்;இவ்வுவமைகளின் அழகை நுண்ணி்தின் உணர்ந்தின்புறுக.