உரை
 
2. இலாவாண காண்டம்
 
8. யூகி போதரவு
 
          நினைத்தோன் பெயர்ந்து நெறியில் தீ்ர்ந்தவர்
          வினைத்துகள் அறுக்கும் வேட்கை யல்லது
          வேண்டுவ உரையா மூங்கைகள் ஆமெனும்
     140   நீதியது நேர்மை உளனாய் ஓதிய
          சமைய விகற்பஞ் சாலக் காட்டி
          அசைவி லாளர் அறநெறி வலித்தது
          மருண்டுந் தெளிந்தும் வந்தவை பிதற்றிப்
          பெயரு மியற்கைப் பெற்றியின் திரியான
 
        137 - 144 : நெறியின்......உளனாய்
 
(பொழிப்புரை) உலகியல் நெறியினின்றும் விலகி மெய்ந் நெறிச் செலவினையுடைய துறவோர் இருவினை என்னும் அழுக்கறுக்கும் ஒரே விருப்பத்தினையுடையராதலன்றி ஏனையவற்றில் தாம் விரும்பியவற்றைக் கூறுதல் இல்லாத ஊமைகளையே ஒப்பர் என்னும் நீதியது நேர்மையினைக் கருதிய கருத்துடையனாய்த் துணிந்து, அத்துறவோர் பள்ளியிற் சென்று அவ்வசைவில்லாத கொள்கையுடைய துறவியர் முன்னோரான் ஓதப்பட்ட சமய வேற்றுமைகளை நிரம்பக்காட்டி. அவற்றுள்ளும் அரிய சமயம் இஃதாம் எனத் துணிந்ததனை மருள்வான் போன்றும்,தெளிவான்போலவும், முகத்தாற்காட்டி ஒரோவழி தனக்குத் தெரிந்தவற்றையும் கூறி அவரோடு அளவளாவி ஊர்க்கு மீளும் கருத்திற் றனது இயல்பினின்றும் பிறழாதவனாய் இருந்து என்க.
 
(விளக்கம்) 137, நெறி - உலகியனெறி என்க.
   138. வினைத்துகள் - இருவினையாகிய மாசு,அறுக்கும் அவ்வொரே வேட்கையுளராதலன்றி என்க.
   139, தாம் விரும்பியவற்றைக் கூறமாட்டாத மூங்கைகள் போல்வர் என்க, மூங்கை - ஊமை.போல்வர் என்னும் உவமச்சொல் வருவித்தோதுக.ஆமெனும் என்புழி - ஆம்; சாரியைச்சொல் என்க.
   140. நீதியின் நேர்மையைக் கருதிய கருத்துடையனாய் என்க, உள்ளன் - உள்ளத்தையுடையன். துறவியர் உலகிய லொழுக்கத்தில் ஈடுபடமாட்டார் ஆதலின்,யாம் அவர் பாலிருத்தலால் ஏதம் வாராது என்று.நினைத்து அவர்பாற் சென்றான் என்பதுகருத்து.ஓதிய முன்னோரான் ஓதப்பட்,ட (சமயங்களின் விகற்பம் என்க.)
   141. சால - நிரம்ப.
   142, அசைவிலாளர் என்பது துறவியரை,
   143. மருள்வான் போன்றும் தெருள்வான் போன்றும் முகத்தாற் காட்டி என்க. இஃதவர் அயிராமைப் பொருட்டென்க. பிதற்றி- மொழிந்து.