உரை
 
2. இலாவாண காண்டம்
 
8. யூகி போதரவு
 
          ஆங்கினி திருந்த அருந்தவ ஒழுக்கின்
     160   சாங்கிய மகளைப் பாங்கினில் தரீஇ
          நிகழ்ந்ததை எல்லா நெறியிற் கூறிப்
          புகழ்ந்த வண்ணம் போகுதல் பொருளெனப்
          பசியும் அழலும் பரிவற எறியும்
          மிசை மருந் தியன்ற இசைவுகொள் இன்பத்துத்
     165   தருப்பணக் கிழியுந் தண்ணீர்க் கரகமும்
          ஒருப்படுத் தமைத்துப் புறப்படப் போக்கி
 
        159 - 166 ; ஆங்கினிது......போக்கி
 
(பொழிப்புரை) அக்குயவன் இல்லத்தே முன்னரே சென்று இனிதாக இருந்த சாங்கியத்தாயைத் தன் பக்கலிலே அழைத்து ஆண்டு நிகழ்ந்தவற்றை எல்லாம் முறைமையோடே கூறி  அவளைப் புகழ்ந்து முன்னர் மறவர்கள் போயினாற்போல நீவிரும்  உதயணன்பாற் போதல் நன்று என்று கூறி மருந்து கலந்த அவல் முடிப்பும் தண்ணீர்க் கரகமும் கூட்டி அமைத்து அவற்றோடு அவளும் புறப்படும்படி செய்து பின்னர் என்க.
 
(விளக்கம்) 159 - 160, அரிய தவவொழுக்கத்தினை மேற்கொண்ட சாங்கியத்தாயை என்க
   162. புகழ்ந்து அ வண்ணம் எனக் கண்ணழித்துப் புகழ்ந்து பாராட்டி அம்மறவர் போயினாற்போல நீயிரும் உதயணன்பாற் போதல் நன்று எனப் பொருள் கூறுக. புகழ்ந்து என்றது,முன்னர் மறவர்க்குக் கூறினாற்போல(113) ''வென்வேல் வேந்தனை விடுத்தனிர் சிறை'' என்ன இன்னோரன்ன முகமன் கூறிப் பாராட்டி என்றவாறு.
   163 - 165, உட்கொண்டோருடைய பசித் துன்பத்தையும் வெப்பத்தால் உற்ற துன்பத்தையும் துவரப் போக்குமியல்புடைய திரியோகம் என்னும் உண்ணும் மருந்து கலக்கப்பட்ட பொருந்நிய இன்பத்தினையுடைய அவல் முடிப்பும் தண்ணீர்க்கரகமும் என்க. தருப்பணக்கிழி - அவல் முடிப்பு, பசியை எறியும் தருப்பணக்கிழியும் அழலை எறியும் தண்ணீர்க் கரகமும் என நிரனிறையாகக் கொள்க. பரிவு - துன்பம். அற - துவர.