உரை
 
2. இலாவாண காண்டம்
 
8. யூகி போதரவு
 
          தெய்வப் படைக்கலங் கையகத் தடக்கி
          வத்தவன் நன்னா டத்திசை முன்னி
          வித்தக ஆணி வேண்டுவயின் முருக்கி
          வித்ணகத் திழிந்து விமானம் ஏறி
     195   மண்ணகத் தியங்கன் மனத்தின் வேண்டிய
          பூந்தார் மார்பிற் புரந்தர குமரனிற்
          போந்தனன் மாதோ புறநகர் கடந்தென்.
 
        191 - 197 ; தெய்வ,,..,கடந்தென்
 
(பொழிப்புரை) கடவுட்டன்மையுடைய படைக்கலன்களைக் கைக்கொண்டு உதயணகுமரனுடைய நாடிருக்கின்ற அத்திசை நோக்கி இயந்திரத் தேரின் விசையாணியை வேண்டுமிடமெல்லாம் முறுக்கி மண்ணுலகத்திலே தன் வானவூர்தியைச் செலுத்துதலை மனத்தின்கண் விரும்பிய இந்திரன் மகனாகிய சயந்தனைப்போன்று அவ்வுச்சயினி நகர்ப்புறத்தைக் கடந்து சென்றனன், என்க.
 
(விளக்கம்) 192 வத்தவன் ; உதயணன். நன்னாடிருக்கின்ற  அத்திசையை என்க.
   193.வித்தகஆணி-வித்ககத்தொழிலானியற்றிய விசையாணி. வேண்டுவயின்-முறுக்க வேண்டுமிடமெல்லாம்.
   194. தனக்குரிய வானுலகத்தினை விட்டுக் கீழிறங்கி வானவூர்தியில் ஏறி என்க.
   195. மண்ணகத்து-நிலவுலகத்தின்கண்.
   196. புரந்தரகுமரன்-இந்திரன் மகன்; அவன் சயந்தன் எனப்படுவான்.
   197. புறநகர்-நகர்ப்புறம் என்றும் ஆறாம்வேற்றுமைத் தொகை நிலைத்தொடர் முன்பின்னாக மாறி நின்றது, புறநகர்க் கடந்து போந்தனன் என மாறுக. மாது, ஒ இரண்டும் அசைச்சொல்.