உரை
 
2. இலாவாண காண்டம்
 
9. யூகி சாக்காடு
 
          ஆணி வையம் ஆரிருள் மறையப்
    15    பூணி இன்றிப் பொறிவிசைக் கொளீஇ
          உள்ளிய எல்லை ஓட்டிக் கள்ளமொ
          டொடுங்குந் தானமுங் கடும்பகற் கரக்கும்
          ஆளவி காடும் அருஞ்சுரக் கவலையும்
          கோள்அவிந் தொடுங்கிய குமூஉக்குடிப் பதியும்
    20    வயவர் நாடுங் கயவர் கானமும்
          குறும்புங் குன்றமும் அறிந்துமதி கலங்காது
          பகலும் இரவும் அகலப் போக்கி
          இருநூற் றிருப திரட்டி எல்லையுள்
          அருநூல் அமைச்சன் அயற்புற நிறீஇ
 
            (யூகி இடபகனிருந்த புட்பக நகரத்தை அடைதல்.)
     14 - 24 ; ஆணி..............நிறீஇ
 
(பொழிப்புரை)  அப் பொறித்தேர் புறத்தார்க்குப் புலனா காமைப் பொருட்டு இருளிலே மறையும்படி இரவிலேயே அதன் பொறியினது விசையைக் கொளுவித் தான் கருதிய எல்லையளவும் நடத்திப் பின்னர்ப் பகற்பொழுதிலே ஒடுங்கி யிருத்தற்குறிய இடங்களும், ஒளிதற்கேற்றதும் ஆள்வழக்கற்றது மாகிய காடும், அரிய பாலையின்கண் உள்ள கவர் வழிகளும், கொள்ளையிடுதல் தவிர்ந்து ஒடுங்கிய எயினர் ஊர்களும், மறவர் நாடும், கயவருடைய காடும், குறும்புகளும், குன்றங்களும் ஆகிய இவற்றின் இயல்பெலாம் உணர்ந்து, அறிவு கலங்காமல் பகலும் இரவுமாகிய இருபொழுதினும் இவை பின்னிடக்கடந்து உஞ்சையி னின்றும் நானூற்று நாற்பது காவதத்திலே அமைந்த அதன் எல்லை யிலே வந்து அத்தேரினை அவ்வெல்லைப்புறத்தே நிறுத்தி என்க.
 
(விளக்கம்) 14. ஆணி-விசையாணி. வையம்-தேர், ஆர் இருள்-நிறைந்த இருள்; செல்லற்கரிய இருளுமாம், இருளிலே தேர்மறையும் பொருட்டு இரவிலே ஓட்டி என்க
    15. பொறிவிசை - பொறியினது விசை. பொறியாகிய விசை எனினுமாம், கொளீஇ -கொளுவி; பூட்டி என்றவாறு.
    16. உள்ளிய-தான்கருதிய, பகைவர் வஞ்சகத்தோடே பதுங்கி யிருக்கும் இடம் என்க, தானம்-இடம். கடும்பகல்-நண்பகல்.நண்பகற் பொழுதிலே-அவ்விரவு புலர்ந்தபகற் பொழுதில் என்றவாறு
    17. கரத்தற்கேற்ற ஆளவிந்த காடு என்க; அடர்ந்த பெருங் காடென்றவாறு. ஆளவி காடு-மனிதர் வழங்குதலில்லாத காடு. அருஞ்சுரக்கவலை-பாலை நிலத்தின் கட் கவர்த்த வழி. கோள்- கொள்ளைத் தொழில். எனவே ஆறலை கள்வர் அத்தொழிலை விடுத்து அறக்குடிபோல ஒடுங்கி வாழ்கின்ற ஊர்கள் என்றாராயிற்று,
        ''கல்லென் பேரூர் கணநிரை சிறந்தன
        வல்வி லெயினர் மன்றுபாழ் பட்டன
        மறக்குடித் தாயத்து வழிவளஞ் சுரவா
        தறக்குடி போலவிந் தடங்கினர் எயினரும்''
                                   (சிலப்; 12;12-15)
என்றார் இளங்கோவடிகளாரும்.
    20. வயவர்-மறவர், கயவர்-கயமாக்கள்.
    21, குறும்பு-சிற்றரண். குன்றம்-மலை'. இவற்றின் இயல்பெல்லாம் அறிந்து என்க. மதி-அறிவு,
    22. நானூற்று நாற்பது காவதத்தில் உள்ள அவ்வவந்தி நாட் டெல்லை என்க.
    24. உணர்தற்கரிய நூல்களை ஓதியுணர்ந்த அமைச்சனாகிய அந்த யூகி என்க. எல்லையின் அயற்புறம் என்க, நிறீஇ-தேரை நிறுத்தி.