|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 9. யூகி சாக்காடு | | புறத்தோர் அறியா மறைப்பமை
மாயமொ டாணி
வையம் அரும்பொறி
கலக்கி மாண வைத்து
மகிழ்ந்தனன் கூடி 30 மாண்முடி
மன்னன் தோள்முதல்
வினவிச் சிரம
மெல்லாஞ் செல்லிருள்
தீர்ந்து கருமம்
அறியுங் கட்டுரை
வலித்துத் தோழனுந்
தானுஞ் சூழ்வது
துணியா வெந்திறன்
மிலைச்சர் லிலக்குவனர் காக்கும் 35
மந்திர மாடத்நு மறைந்தனன் இருந்து
| | 25 - 35 ; புறத்தோர்............இருந்து
| | (பொழிப்புரை) தன் நண்பனாகிய
இடபகண் என்பான் இருந்த புட்பகமென்னும் நகரத்தின்கண் ஞாயிறு
மறையச்சென்று, பிறர் அறியமாட்டாத மறைவிடத்தின் கண் அப்பொறித்
தேரினைப் பொறி கலக்கி மறைத்து வைத்து அவ்விட்பகனை மகிழ்ந்து கண்டு,
உதயணனு டைய தோள் நலத்தை உசாவியறிந்து, வழிவந்த இளைப்
பெல்லாம் அவ்விரவிலை தீர இளைப்பாறி இருந்துமேல் ஆற்றவேண்டிய செயல்களை
நினைத்து அவற்றைத் தானும் அத்தோழனுமாக ஆராய்தலைக்
கருதிவருவோ ரைத் தடுக்கும் திறலுடைய மிலைச்சரானே பாதுகாக்கப்
படும் சூழ்ச்சி மன்றத்திலே மறைந்தி்ருந்து என்க,
| | (விளக்கம்) 25. தோழன்;
இடபகன், 26, புட்பகம்-ஒரு நகரம்இஃது உதயணனுடைய சிறந்த நகரங்களுள்
ஒன்று: இதனை அவன் இடபகனுக்கு முற்றூட்டாக வழங்கினன். ஆதலின்
அதன்கண் அவன் நன்கு அமைந்து வாழ்ந்திருந்தான்.
பொழுது - ஞாயிறு. பொழுதுமறை - மாலைப் பொழுது,
27, அயலார் அறிந்துகொள்ள மாட்டாததொரு மாயமுடைய மறைப்பிடத்திலே
என்க, 28, கலக்கி -பிரித்து. 29. மாண -
மாட்சிமைப்பட; கெடாதபடி என்பது கருத்து, மகிழ்ந்தனன்; முற்றெச்சம்,
அத்தோழனைக் கூடி என்க. 30. மன்னன்; உதயணன். அரசரை
நலமுசாவும்,பொழுது தோள் நலம் உசாவுதல் மரபு, இதனை, ''வேந்தர்
வேந்தன்றன் வரைத்தடந்தோளிணை வலியவோ என்றான்'' எனவரும்
கம்ப ராமாயணத்தானும் (சடாயுகா- 18) உணர்க. தோளாகிய முதலை
என்க, 31, சிரமம் - வருத்தம். 32, வலித்து - நினைத்து. 33. துணியா
-துணிந்து. 34. வெல்விய ஆற்றலுடைய மிலைச்சர் என்க,
மிலைச்சர்-சோனகர், விலக்குவனர் ; முற்றெச்சம். 35.
மந்திரமாடம்-ஆராய்ச்சி மன்றம், மறைந்தனன்- மறைந்து;
முற்றெச்சம்.
|
|