உரை
 
2. இலாவாண காண்டம்
 
9. யூகி சாக்காடு
 
         
    55    உதையண குமரனும் உள்ளம் பிறழ்ந்ததன்
          சிதைவுகொள் சீலக் தெளிந்தனன் கேட்டு
          வீணை எழீஇ வீதியின் நடப்ப
          ஆணை ஆசாற் கடியுறை செய்யும்
          மாணி போல மதக்களிறு படியத்
    60    திருத்தகு மார்பன் எருத்தத் திவர
 
        55 - 60 ; உதையணகுமரனும்........,,,,,,இவர
 
(பொழிப்புரை)  தூதர் வாயிலாய் அம்மொழி கேட்ட உதயணகுமரனும் நெஞ்சம் வேறுபட்டு அக்களிற்றினது சிதைந்த செயலை நன்கு கேட்டுத் தெளிந்து, விணையின் கண் இசை எழுப்பிக்கொண்டு அவ்வியானை வந்த தெருவின் மீது அதனெதிர் செல்லா நிற்ப அவ்விசையினைகேட்டமாத் திரையில் அக்களிறு நல்லாசிரியனுக்கு மெய்யடிமை தொழில் செய்யும் நன்மாணாக்கனை போன்று அவன் அடியின்கண் வணங்கா நிற்ப அத்திருமகள் தக்கிருக்கின்ற மார்பையுடைய உதயணகுமரனும் அதன் எருத்தத்திலே ஏறியிருந்து இனிது ஊராநிற்ப என்க,
 
(விளக்கம்)   55. உள்ளம் பிறழ்ந்து-நெஞ்சம் வேறுபட்டு. என்றது பகைமை நீங்கிக் கேண்மை கொண்டு என்றவாறு.
    56. சீலம்-ஒழுக்கம். தெளிந்தனன்; முற்றெச்சம். கேட்டுத் தெளிந்தென்க.
    57. எழீஇ-இசை எழுப்பி.
    58. ஆணை ஆசான்-கட்டளை யிடுதற்குரிய ஆசிரியன். அடியுறை - அடிமைத்தொழில்,
    58. மாணி-மாணாக்கன்,
    60. மார்வன்: உதயணன். இவர-ஊர்ந்துவர.