உரை
 
2. இலாவாண காண்டம்
 
9. யூகி சாக்காடு
 
          அண்ணன் மூதூர் ஆர்ப்பொடு கெழுமி
          மன்னவன் வாழ்க வந்தவன் வாழ்க
          ஒலிகெழு நகரத் துறுபிணி நீக்கிய
          வலிகெழு தடக்கை வயவன் வாழ்கெனப்
    65    பூத்தூய் வீதிதோ றேத்தினர் கதிர்கொள
          அவந்தி அரசன் உவந்தனன் விரும்பிப்
          பொலிவுடை உரிமையொடு பரிசனஞ் சூழப்
          புலிமுக மாட மலிர ஏறி
          மையல் வேழ மடக்கிய மன்னனை
    70    ஆணை கூறா தருண்மொழி விரவாது
          காண லுற்றனன் காதல் இதுவெனச்
          சேனை வேந்தன் தானத்து விளிப்ப
 
        61-72 ; அண்ணல்............விளிப்ப
 
(பொழிப்புரை)  தலைநகரமாகிய அவ்வுச்சயினி மாந்தர் ஆரவாரத்தோடு கூடி மன்னவன் வாழ்க! வத்துவன் வாழ்க! ஆரவாரமுடைய இந்நகரத்துள்ளோருடைய பெருந்துன்பத்தைப் போக்கிய வீரன் வாழ்க! என்று பாராட்டி வீதிதோறும் அவன்மீது மலர்மாரி பொழிந்து எதிர்கொள்ளா நிற்பப் பிரச்சோதனனும் பெரிதும் உதயண குமரனை விரும்பித் தன் உரிமை  மகளிரும் பரிசனங் களும் தன்னைச் சூழாநிற்பப் புலிமுக மாடம் நிரம்பும்படி ஏறி நின்று, கட்டளையிடாமலும், அருண்மொழி கூறாமலும் யாண் நின்னைக் காணவந்தேன் என் காதல் அத்தகையது! என்று கூறித் தனதிடத்தே வரும்படியாக அழையா நிற்ப என்க.
 
(விளக்கம்) 66. அவந்திநாட்டு அரசனாகிய அப் பிரச்சோதனன் என்க.
    67. உவந்தனன் ; முற்றெச்சம்; உவந்து.
    68. உரிமை - தேவியர். பரிசனம் - ஐம்பெருங்குழுவினர் முதலியோர். புலிமுகமாடம்-புலியுருவமமைத்த வாயின் மாடம்.
    69. மையல்-மயக்கம், மன்னனை ; உதயணனை.
    70-1. அரசர் ஒருவனைக் காண விரும்பினால், கட்டளையிட்டழைத்தல் மரபாகலின் அம் மரபுமின்றி, ஒரு நன்றி செய்தார்க்கு அருள்மொழி கூறி நன்றி செலுத்துதல்மரபு ; அதுவுமின்றி இங்ஙனம் நின்னைக் காணவந்தேன் அங்ஙனம் வருதற்குக் காரணம் என் காதன் மிகுதியே என்பது கருத்து.
    72. சேனை வேந்தன் ; படையையுடைய பிரச்சோதன்ன். தன் தானத் திற்குத் தானே அழையா நிற்ப என்க. தானம் - இடம்