உரை
 
2. இலாவாண காண்டம்
 
9. யூகி சாக்காடு
 
          தெருட்டுதற் காயவித் தீக்குறி வேழம்
    80    யாதிற் சிதைந்ததஃ தறிய உரைக்கென
          ஏதில் வேந்தன் காதலின் வினவ
          வேத முதல்வன் விளம்பிய நூல்வழி
          மாதங்க மென்று மதித்தலிற் பெற்ற
          பெயரது மற்றதன் இயல்பறிந் தோம்பி
    85    வெருட்டலுந் தெருட்டலும் விடுத்தலும் விலக்கலும்
          பணித்தலும் உயர்த்தலுந் தணித்தலுந் தாங்கலும்
          தமர்பிறர் என்ப தறியுந் திறனும்
          நீலம் உண்ட நூலிழை வண்ணம்
          கொண்டது விடாமைக் குறிப்பொடு கொளுத்தல்
    90    பண்டியல் தொன்னூற் பாகியல் பாதலின்
          முதற்கட் பிணித்தோர் சிதைப்பில் விடாது
          கொண்டதை இதுவெனச் சண்ட வேந்தற்
          கெதிர்மொழி கொடீஇக் கதிர்முகம் எடுத்தோன்
 
        79-93 ; தெருட்டுதற்கு............எடுத்தோன்
 
(பொழிப்புரை)  இங்ஙனம் நின்னாலே தெளிவித்தற்கு ஆன இவ்வியானை எதனால் இவ்வாறு சிதைந்தது? அதனை யான் அறியும்படி விளக்கிக் கூறுக என்று முன்னர் ஏதிலனாயிருந்த அம்மன்னவன் காதலோடே வினவாநிற்ப, உதயணகுமரன் அம்மன்னனை நோக்கி '.வேந்தே! யானைப் பிறப்பினை வேதமுதல்வன் ஒதிய நூலினை ஆராய்ந்து சான்றோர் அதனை உயர்ந்த பிறப் பினையுடையதென்று மதித்தலாலே அது மாதங்கம் என்ப தோர் உயரிய பெயரை உடைத்தாயிற்று. அத்தகைய யானையை அதன் இயல்பறிந்து பாதுகாத்து வெருட்டல் முதலியவற்றின் இயல்புகளை அவ்வியானை நீலநிறங் கொண்ட  நூலிழைபோலப் கொண்டது விடாதபடி அவற்றின் குறிப்பு மொழிகளோடே அறிவித்தல் யானை நூல் உணர்ந்த பாகர் இயல்பாகும். இந்நளகிரியை முதன் முதலாகக் கட்டிப் பழக்கியபாகர் அதனைச் சிதையச்செய்து பிணித்த காரணத்தானே அச்சிதைவினை அது விடாது மேற் கொண்டது,'' என்று அப்பிரச்சோதனனுக்கு விடையிறுத்துத் தன் தலையை உயர்த்து நோக்கிய உதயணகுமரன் என்க,
 
(விளக்கம்) 82. வேதமுதல்வன் - அருகக் கடவுள். ஆகமமூன்றிற்கும் முதலாயுள்ளவன் என்றவாறு. ஆகமம் மூன்றாவன; அங்காகமம்; பூர்வாகமம்'; பகூசுருதி யாகமம்  என்பன.
        ''விண்ணவன் வேதமுதல்வன் விளங்கொளி
        ஓதிய வேதத் தொளி''   (சிலப். 10.189-90)
என்றார் இளங்கோவடிகளாரும்.
     வேதமுதல்வன் ஓதிய நூலினை ஆராய்ந்து அதனை மதித்தலில் மாதங்கம் என்று பெற்ற பெயரது என்க, மதித் தலாவது-விலங்குப் பிறப்பேயாயினும் மக்கள் போன்று ஆறறிவுடையது என மதித்தல் என்க.
        ''மக்கள் தாமே ஆறறி வுயிரே
        பிறவு முளவே அக்கிளைப் பிறப்பே'' 
  (தொல்.மரபு.33)
என்புழிப் பிறவும் என்றது, குரங்கு யானை முதலியன ஆதலின் யானைப் பிறப்பு மக்கட்பிறப்போடொத்த தென்க.
    85. வெருட்ட.ல் - அச்சுறுத்தல். தெருட்டல - உணர்த்தல்; விடுத்தல்-செலுத்தல். விலக்கல் -தடுத்தல்.
    86, பணித்தல் - பணிவித்தல்; ஏவுதலுமாம். தாங்கல் - சுமத்தல்,
    88-90. நீல நிறமேற்ற நூலிழை பிறநிறமேலாது அந்நிறத்தை விடாதிருத்தல்போல் மேற்கூறிய செயல்களை அவற்றிற்குரிய குறிப்பு மொழியைக் கூறுமிடத்துப் பிறசெயலைச் செய்யாமல் அவ்வச் செயலையே செய்யும்படி பழக்குதல், யானைப்பாகு நூல் உணர்ந்தோர் தன்மைஎன்க, பாகு-பாகர்,
    91, முதன்முதற் பிணித்துப் பழக்கியவர் சிதைத்தலானே அக் குணத்தை விடாது இது சிதைகின்றது என்பது கருத்து.
    92. கொண்டதை-கொண்டது. இது-இந்நளகிரி.
    93, கொடீஇ-கொடுத்து,