உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
9. யூகி சாக்காடு |
|
தகைமலர்ப் படலைத் தந்தை தலைத்தாள்
95 முகைமலர்க் கோதை முறுவற்
செவ்வாய்க் கன்னி
ஆயத்துப் பொன்னணி சுடர
வீசுவளிக் கொடியின் விளங்குபு நின்ற
வாசவ தத்தை மதிமுகத்
தேற்றிச் சிதரரி
மழைக்கண் மதர்வை நோக்கம் 100 உள்ளகத்
தீர அள்ளற் பட்ட
போதகம் போலப் போதல் ஆற்றாக்
காதற் குமரனை
|
|
94 - 102 ;
தகைமலர்...............குமரனை
|
|
(பொழிப்புரை) ஆயமகளிராகிய
கன்னியரோடு தன் தந்தையின் முன்னர்க் கோதையையும் முறுவலையும்
செவ்வாயையும் உடையளாய்ப் பொன்னாலியன்ற அணி
கலன்கள் ஒளிவீசக் காற்றால் அலைப்புண்ட பூங்கொடி போல ஒல்கி
விளங்கி நின்ற வாசவதத்தையின் திங்கள் போன்ற முகத்தின் கண்ணே தன்
நோக்கத்தை ஏற்றி அவள் வரிபரந்த குளிர்ந்த மதர்ப்புடைய பார்வை தனது
நெஞ்சத்தை ஈர்த்தலானே சேற்றிலழுந்திய யானைபோன்று
அவ்விடத்தினின்றும் நீங்கவியலாத காதலையுடையவனாகிய
அவ்வுதயணகுமரன் என்க
|
|
(விளக்கம்) 94. தகை -
அழகு. தகைமலர் ; வினைத்தொகையுமாம், படலை-தளிர்விரவித் தொடுத்த
மாலை, தந்தை; பிரச்சோதனன், தலைத்தாள் - (தாள்தலை) முன்னர் என்றவாறு.
95 முகை - அரும்பு. செவ்வாய் - சிவந்த வாய்
96. கன்னி ஆயம் - கன்னியராகிய தோழியர்
கூட்டம் 97. வளிவீசு கொடி என்க. இஃது உதயணனைக் கண்டு
நாணி அசைந்து நிற்கும் வாசவதத்தைக்கு உவமை. விளங்குபு -
விளங்கி. 98. மதிமுகம்; உவமத்தொகை. தன் பார்வையைச்
செலுத்தி என்க. 99. சிதர்அரி - படர்ந்த வரிகள். மழைகண்
- குளிர்ந்த கண். மதர்வை - மதர்ப்பு; களிப்பு
100. ஈர - அறுக்க. அள்ளல் -
சேறு. 101. போதகம் - யானை 102. காதலையுடையனான அக்குமரனை
என்க.
|