|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 9. யூகி சாக்காடு | | வெஞ்சொல் வேட்டத்
தஞ்சுவரு சீற்றத்துச்
சலம்புரி நெஞ்சிற் சவரர் புளிஞர்
கலந்தனர் எழுந்து கானந்
தெரிவோர் ஊன்என
மலர்ந்த வேனில் இலவத்துக் 140 கானத்
தகவயிற் கரந்தனன் இருந்த
அரச குமரனை அகப்படுத் தார்ப்ப
| | 136 - 141 ;
வெஞ்சொல்,,,,,,,,ஆர்ப்ப
| | (பொழிப்புரை) சொல்
முதலியவற்றையுடைய சவரரும் புளிஞருமாகிய வேட்டுவர் தம்முட்கூடி எழுந்து
அக்காட்டினை ஆராய்ந்து வந்தனராக ; அங்ஙனம் வரும் பொழுது
அதனூடே ஓரிலவின் கீழே மறைந் திருந்த நம் அரசகுமரனை அவ்வேடர்
கண்டு சூழ்ந்து கொண்டு ஆரவாரியா நிற்ப, என்க.
| | (விளக்கம்) 136 - 137 ;
கேள்விக்கின்னாத வெவ்விய சொல்லினையும், வேட்டத்தினையும், பிறர்க்கு
அச்சம் வருதற்குக் காரணமான வெகுளியையும் வஞ்சணையே செய்யும்
நெஞ்சினையும் உடைய சவரரும் புளிஞரும் ஆகிய வேடர் என்க. சீற்றம்-வெகுளி.
சலம்-வஞ்சனை. சவரர் புளிஞர் என்பன வேட்டுவர் வகை. 138.
கலந்தனர்; முற்றெச்சம். தெரிவோர் - ஆராய்வோர்.
ஆறுசெல்வோ ருளரோ என்றும், தமக்கிரையாகும் விலங்குகள் உளவோ
என்றும் ஆராய்வோர்என்க. 139, வேனிற் காலத்தே ஊன்
போலச் சிவப்பாக மலரும் இலவம் என்க. 140.
அக்கானத் தகவயின் இலவத்துக் கரந்து இருந்த நம் மரசகுமரனை என்க.
கரந்தனன்; முற்றெச்சம். 141. தாம் சூழ்ந்து கொள்ளுமாற்றல்
தம்முட்படுத்தி மகிழ்ச்சி யாலே ஆரவாரிப்ப என்க.
|
|